
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரிய கிளாம்பாக்கம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ தர்மராஜா சமேத திரௌபதி அம்மன் திருக்கோவில் உள்ளது. இத்திருக்கோவிலில் 3-ம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த மாதம் 27-ம் தேதி வெள்ளிக்கிழமை கோவில் வளாகத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து நாள்தோறும் அம்மன் திருவீதி உலா, பகாசூரன் வதம், சீர்வரிசையோடு அம்மனுக்கு திருக்கல்யாணம் செய்தல், ஊஞ்சல் ஆட்டம் நிகழ்ச்சி, நச்சுகுழி, அர்ஜுனன் தபசு,பெண்கள் முளைப்பாரி எடுத்தல், தர்மராஜர் வீதி உலா, மாடுபிடி சண்டை விளையாட்டு, துரியனை பீமன் வதம் செய்தல், பதினெட்டாம் போர் எனும் தெருக்கூத்து ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நேற்று காலை அக்கினி குண்டம் எடுத்தல், அலகு பானை நிகழ்ச்சி, அக்கினி குண்டத்தில் குமார மக்கள் தீ மூட்டும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது. மாலையில் காப்பு கட்டி விரதம் இருந்த குமார மக்கள் எனப்படும் பக்தர்கள் ஊர் எல்லையில் புனித நீராடி அலங்காரம் செய்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பின்னர், பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் ஊர் எல்லைக்கு சென்று புனித நீராடிய பக்தர்களை மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் திருக்கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் பின்னர், பாரத பூசாரி செல்வம் சிறப்பு பூஜைகளை செய்தார். இதனைத் தொடர்ந்து திருக்கோவில் எதிரே அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் ஒருவர் பின் ஒருவராக 160 பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதன் பின்னர், மங்கள வாத்தியம் முழங்க, வாண வேடிக்கையுடன் சுவாமி முக்கிய வீதிகளின் வழியாக திருவிதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று அரவானை தகனம் செய்யும் நிகழ்ச்சியும், தர்மர் பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தீமிதி திருவிழா நிகழ்ச்சியில் பெரிய கிளாம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.