
பர்மிங்காம்,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 371 ரன்களை இலக்காக நிர்ணயித்த போதிலும் அதை இங்கிலாந்து அணி கடைசி நாளில் வெற்றிகரமாக விரட்டிப்பிடித்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இது பர்மிங்காம் மைதானத்தில் இந்திய அணி பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும். இதற்கு முன்னர் இங்கு விளையாடிய 8 டெஸ்டில் ஆடி 7-ல் தோல்வியும் ஒன்றில் டிராவும் கண்டிருந்தது. இந்த வெற்றியின் மூலம் அந்த 58 ஆண்டு கால சோகத்திற்கு சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இதனால் இந்திய அணியை பல முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலி பாராட்டியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "எட்ஜ்பாஸ்டனில் (பர்மிங்காம் மைதானம்) இந்தியாவுக்கு அபார வெற்றி. பயமின்றி விளையாடிய அவர்கள் இங்கிலாந்தை தோல்விக்கு தள்ளினார்கள். சுப்மன் கில் புத்திசாலித்தனமாக இந்திய அணியை வழி நடத்தி பேட்டிங்கிலும் அசத்தினார். களத்தில் அனைத்து வீரர்களும் தாக்கத்தை ஏற்படுத்தினர். இந்த மைதானத்தில் சிராஜ் மற்றும் ஆகாஷ் பந்து வீசிய விதத்திற்கு சிறப்பு பாராட்டுகள்" என்று பதிவிட்டுள்ளார்.