பெரம்பலூர் மாவட்டத்தில் நாய்கள், செல்லப்பிராணிகளுக்கு 15 இடங்களில் வெறிநோய் தடுப்பூசி முகாம்

4 hours ago 2

*முகாம்களை மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் தெரு நாய் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு 15 இடங்களில் இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாம்களை பொதுமக்கள் மற்றும் செல்லப் பிராணிகள் வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தார்.

‘ரேபிஸ்’ எனப்படும் வெறி நோய் வைரஸ் கிருமிகளால் ஏற்படும் ஒரு கொடிய நோயாகும். இந்நோய் வெறி நோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் கடிக்கும் பொழுது எல்லா பாலூட்டிகளிலும் மாடுகள், ஆடுகள் இதர நாய்கள் போன்ற பிராணிகளுக்கும், மனிதர்களுக்கும் பரவும்.

உலகில் ஆண்டு தோறும் 50 ஆயிரத்திற்கும் மேலானோர் வெறி நோய் பாதிப்பினால் இறக்கிறார்கள். இதில் 80 சதவீதத்திற்கும் மேல் இந்தியர்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில், ரேபிஸ் நோய் பொருளாதாரத்தில் பின் தங்கிய கீழ்த்தட்டு மக்கள் மற்றும் குழந்தைகளை பெருமளவில் தாக்குகிறது. வெறிநோய் கொண்ட நாய்கள் கடிப்பதன் மூலம் அதன் உமிழ் நீரில் உள்ள வைரஸ் கிருமிகள் அடிபட்ட காயத்தின் மூலம் நரம்புகளை அணுகி கிருமிகள் பல்கி பெருகி நரம்பு மண்டலம் மூலம் மூளையை தாக்கி பாதிப்பு ஏற்படுத்துகிறது.

இந்நோயினை, நாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கும், தெருவில் சுற்றித் திரியும் நாய்களுக்கும், வெறிநோய் தடுப்பூசி வருடாந்திர கால இடைவெளியில் போடுவதன் மூலம் தடுக்கலாம்.

பெரம்பலூர் மாவட்டத்தில் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளன. இதனால், சமீப காலமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பொது மக்களும், கால் நடைகளும் வெறி நோய் தாக்குதலுக்கு உட்படுகின்றனர்.

இந்த வெறிநாய் தாக்குதலிலிருந்து பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை காப்பாற்றுவதற்கு மாவட்டக் கலெக்டர் தலைமையில் கால்நடை பராமரிப்புத்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்டக் கலெக்டர் அறிவுறுத்தியதன் படி, கால்நடை பராமரிப்பு துறையும், மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி அமைப்புகளும் ஒருங்கிணைந்து விலங்கு நல அமைப்புகளோடு இணைந்து மாவட்டம் தோறும் கிராமங்களில் இலவச வெறி நோய் தடுப்பு முகாம் நடத்த திட்டமிட்டு, நேற்று வேப்பந்தட்டை ஒன்றியத்தில், அன்னமங்கலம் கிராமத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் செல்லப் பிராணிகளுக்கும், தெருவில் சுற்றித் திரியும் நாய்களுக்கும் கால்நடை பராமரிப்பு துறை மற்றும் R.A.I.N. என்றஅமைப்பும் உள்ளாட்சி அமைப்புடன் இணைந்து வெறி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

இம்முகாமில், 47 செல்லப் பிராணிகளுக்கும், 56 தெரு நாய்களுக்கும் விலங்கின நல வாரியத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், வெறிநோய் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

மேலும், கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக வெறிநோய் தாக்குதல் குறித்து விழிப்புணர்வும் ஒளிப்பட காட்சிகளுடன் படங்களுடன் பொதுமக்களுக்கு காண்பிக் கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இம்முகாம் போன்று பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மேலும் பதினைந்து முகாம்கள் நடத்தப்பட உள்ளது. பொது மக்கள் மற்றும் செல்லப் பிராணிகளை வளர்ப்போர்கள் முகாம்களை முழு அளவில் பயன்படுத்திக் கொண்டு தங்கள் செல்லப் பிராணிகளையும், தங்களையும் வெறி நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இம்முகாமில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர் பகவத்சிங், துணை இயக்குநர் டாக்டர் பாபு, உதவி இயக்குநர்கள் டாக்டர்கள் மூக்கன், குமார், வேப்பந்தட்டை கால்நடை உதவி மருத்துவர் ராமன், ரெயின் அமைப்பைச் சார்ந்த வித்யா லட்சுமி, கால் நடை மருத்துவக் குழுவினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் நாய்கள், செல்லப்பிராணிகளுக்கு 15 இடங்களில் வெறிநோய் தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article