திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் 5 வது வார்டு பாரத் நகர், திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே நெய்தல் நகருக்கு போகக்கூடிய மாநகராட்சி சாலையின் இரண்டு புறமும் தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்து கார், வேன் ஆகிய வாகனங்களை நிறுத்திவந்தனர். இதன்காரணமாக இந்த வழியாக குடிநீர் லாரிகள், பள்ளி வாகனங்கள் ஆகியவை செல்ல மிகவும் சிரமப்பட்டது. மேலும் பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களின் மறைவில் இரவு நேரங்களில் மது அருந்தும் பாராக பயன்படுத்திவந்தனர். அந்த பகுதியில் போக்குவரத்து போலீசாரால் ஒட்டப்பட்டிருந்த நோ பார்க்கிங் ஸ்டிக்கரையும் கிழித்துவிட்டனர். இதுகுறித்து சில நாட்களுக்கு முன் தமிழ்முரசு நாளிதழில் செய்தி வெளியானது.
இந்தநிலையில் எண்ணூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோதண்டம், உதவி ஆய்வாளர்கள் பேபி, ஜெகன், முருகானந்தம் ஆகியோர் நெய்தல் நகர் பகுதிக்கு வந்து ஆய்வு செய்தனர். திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சாலையில் இரண்டுபுறமும் ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்து அப்புறப்படுத்தினர்.
‘’போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அபராதம் விதிக்கப்படும்’ என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆக்கிரமிப்பு வாகனங்களை அப்புறப்படுத்திய போலீசாருக்கு குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.
The post திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பறிமுதல், அபராதம்: போக்குவரத்து போலீசார் அதிரடி appeared first on Dinakaran.