
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பெரம்பலூர் மாவட்டம், மலையாளப்பட்டி கிராமத்தில் சின்னமுட்டலுவில் நீர் தேக்கம் அமைக்க அரசு முன்வருமா என்று பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "2017, 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் இந்த திட்டம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த பகுதியில் நிலமட்டத்தின் கீழே 12 மீட்டர் ஆழம் வரை கூழாங்கற்கள், மண் கலந்து காணப்படுகின்றன. அதற்கு கீழே சிதைவுற்ற மணல் காணப்படுகிறது. எனவே இந்த இடத்தில் நீர் தேக்கம் சாத்தியக் கூறு இல்லை" என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய உறுப்பினர் பிரபாகரன், பெரம்பலூர் மாவட்டத்தில் கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், "கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை கட்ட ரூ.6.50 கோடி ஆகும் என்று மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. எனவே நிதி நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.