பெரம்பலூரில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி

3 weeks ago 6

பெரம்பலூர்,டிச.25: பெரம்பலூரில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணர்வுப் பேரணியை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். பெரம்பலூர் பாலக்கரை பகுதியில், நேற்று தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தமிழ் அமைப்புப் பிரதிநிதிகள் பங்கேற்ற தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் கொடிய சைத்து துவக்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் தமிழே ஆட்சி மொழி என 1956 இல் சட்டம் இயற்றப்பட்டு,தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பெயர் பலகையை தமிழில் அமைக்க வேண்டுமென அரசு ஆணையிட்டு 68 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதனை நினைவு கூறும் வகையில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 18 முதல் வருகிற 27-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நேற்று நடைபெற்ற ஆட்சிமொழிச்சட்ட வார விழிப்புணர்வு பேரணியை மாவட்டக் கலெக்டர் தொடங்கி வைத்தார். இந்தப்பேரணியில் தமிழ்ச் செம்மல் விருதாளர்கள், வணிக நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், அரசு அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், லாடபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, மற்றும் சாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவைகளைச் சேர்ந்த 280 பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 500க்கும் மேற்பட் டோர் கலந்துகொண்டனர்.

இந்தப் பேரணியில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பறை இசையுடன் மாணவர்கள் சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சி கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் \”எங்கும் தமிழ் எதிலும் தமிழ்\” \”அன்னைத் தமிழே ஆட்சி மொழி\” \”எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு\” \”இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்\” வணிக நிறுவனங்களின் பெயர்களை தமிழில் வைக்க வேண்டுவது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி வந்தனர்.

இப்பேரணியானது பாலக்கரை பகுதியிலிருந்து, சங்குபேட்டை, பழைய பேருந்து நிலையம் வழியாக பெரம்பலூர் வட்டாட்சியர்அலுவலகத்தில் நிறைவுற்றது. இந்நிகழ்வுகளில், தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் சித்ரா, வட்டாட்சியர் சரவணன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பிரதிநிதிகள், தமிழ் அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டப் பலரும் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூரில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Read Entire Article