சிவகங்கை: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்ப சொந்த நிதியில் கட்டப்பட்டுள்ள வளர்தமிழ் நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் திருவள்ளுவர் சிலையும் திறந்து வைத்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் சிவகங்கை மாவட்டத்தில் களஆய்வு மேற்கொள்கிறார். காரைக்குடி பல்கலை. விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றும் அவர், நாளை 40 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மக்களிடம் சென்றடைகிறதா என்பதை ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு செய்து வருகிறார். திட்டங்களின் செயல்பாடுகள், முன்னேற்றங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதன்படி இன்றும், நாளையும் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவி வழங்கல், திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டல், முடிவுற்ற திட்டப்பணிகள் தொடங்கி வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ள உள்ளார்.
மாலை 5 மணிக்கு காரைக்குடி தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து கலந்துரையாடுகிறார். இன்று இரவு காரைக்குடியில் தங்கும் அவர், நாளை காலை சிவகங்கை செல்கிறார். அங்கு காலை 9 மணிக்கு மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் இலவச வீட்டுமனைப்பட்டா, உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கல் என சுமார் 40 ஆயிரம் பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இன்று காலை 9 மணியளவில் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் சென்றடைந்தார். திருச்சியில் இருந்து காரைக்குடிக்கு வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக உறுப்பினர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்ப்பை கொடுத்தனர். காலை 11.15 மணிக்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் சார்பில் கட்டப்பட்டுள்ள வளர் தமிழ் நூலகம் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்
The post காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் வளர்தமிழ் நூலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.