கும்பகோணம்: சம்பா பருவ நெல் அறுவடை பணிகள் தொடங்கிவிட்ட நிலையில் தற்போது விட்டுவிட்டு பெய்து வரும் மழையால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மழை பெய்தால் நெல் மணிகளை காப்பாற்ற அரசு உதவ வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். காவிரி டெல்டா பாசன பகுதிகளில் தற்போது சம்பா பருவ நெல் அறுவடை பணிகள் தொடங்கி உள்ளன. இந்த நிலையில் திடீரென மழை பெய்து வருவதால் கும்பகோணம் சுவாமி மலை உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெற்பயிர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. எனவே தொடர்ந்து மழை பெய்தால் நெல் மணிகளை காப்பாற்றும் வகையில் தேவையான அளவு அறுவடை இயந்திரங்கள் மற்றும் தார்பாய்களை அரசு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 26 ஆயிரம் ஹெக்டேரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர்.
இதில் 2000 ஏக்கருக்கும் மேல் நெற்கதிர்கள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பாதிப்புகள் குறித்து கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தரகம்பாடி அருகே மேல்மாத்தூர் திருவிளை ஆட்டம் ஆகிய கிராமங்களில் சேதமடைந்த பயிர்களை காண்பித்து விவசாயிகள் அரசிடம் உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற அமைச்சர் மெய்ய நாதன் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மயிலாடுதுறை மாவட்டத்தில் 69 ஆயிரம் ஹெக்டேர் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 27 ஆயிரம் ஹெக்டேர் நெல் மழையால் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
The post காவிரி டெல்டா பாசனப் பகுதிகள் பருவம் தவறிய மழையால் பாதிப்பு: தார்பாய்களை அரசு தயார்நிலையில் வைத்திருக்கக் விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.