பென் டக்கட் அதிரடி சதம்; 2ம் நாள் முடிவில் இங்கிலாந்து 239/6

4 weeks ago 7

முல்தான்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 259 ரன்கள் எடுத்தது. இந்நிலையில், 2வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.

இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 123.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 366 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் 118 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேக் லீச் 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேக் க்ராவ்லி மற்றும் பென் டக்கட் ஆகியோர் களம் இறங்கினர். இதில் டக்கட் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன.

இதில் க்ராவ்லி 27 ரன், அடுத்து வந்த ஆலி போப் 29 ரன், ஜோ ரூட் 34 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஒருபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கட் சதம் அடித்த நிலையில் 114 ரன்னில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து களம் இறங்கிய ஹாரி புரூக் 9 ரன், பென் ஸ்டோக்ஸ் 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 53 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 239 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் ஜேமி ஸ்மித் 12 ரன், பிரைடன் கார்ஸ் 2 ரன் எடுத்து களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் சஜித் கான் 4 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இங்கிலாந்து அணி இன்னும் 127 ரன்கள் பின்னிலையில் உள்ளது. நாளை 3ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Read Entire Article