
திருவனந்தபுரம்,
டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றியவர் யஷ்வந்த் வர்மா. ஹோலி பண்டிகையின்போது இவருடைய வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து தீயணைப்பு படையினர், தீயை அணைக்க சென்றபோது, அந்த வீட்டில் கட்டுக்கட்டாக பணம் மற்றும் நகைகள் இருந்தன. அவற்றை பின்னர் போலீசார் கைப்பற்றி விசாரித்தனர்.
கணக்கில் காட்டப்படாத அந்த பணத்தின் மதிப்பு ரூ.15 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் விசாரணை நடத்தியது. இதன்பின்னர் சம்பந்தப்பட்ட நீதிபதியை அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக மாற்றம் செய்ய முடிவு செய்து, கொலீஜியம் தனது பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியது.
எனினும், முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் ஐகோர்ட்டு வழக்கறிஞர்கள் ஏற்க மறுத்தனர். அலகாபாத் ஐகோர்ட்டு ஒரு குப்பைத் தொட்டியா? என அவர்கள் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், நீதிபதி பொறுப்பில் இருந்து யஷ்வந்த் வர்மா விடுவிக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த 3 நீதிபதிகள் கொண்ட குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு நியமித்து உள்ளது.
இந்த நிலையில், நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் என துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கேரள மாநிலம் கொச்சியில், சட்டக் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடிய ஜகதீப் தன்கர், "நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரத்தில் இதுவரை ஒரு எப்.ஐ.ஆர். கூட பதிவு செய்யப்படவில்லை.
சுப்ரீம் கோர்ட்டு 1990-களில் பிறப்பித்த ஒரு உத்தரவின் காரணமாக மத்திய அரசால் இந்த விவகாரத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய முடியவில்லை. இந்த விவகாரத்தில் தொடக்கத்திலேயே கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும் இந்த விவகாரத்தை நீதித்துறையின் 'ஐடஸ் ஆப் மார்ச்'(Ides of March) என்று ஜகதீப் தன்கர் குறிப்பிட்டார். 'ஐடஸ் ஆப் மார்ச்' என்பது ஷேக்ஸ்பியர் எழுதிய 'ஜூலியஸ் சீசர்' கதையில் வரும் நிகழ்வு ஆகும். மார்ச் மாதத்தின் 15-ம் நாளில் பண்டைய ரோம் நகர மக்கள் 'ஐடஸ் ஆப் மார்ச்' என்ற பண்டிகையை கொண்டாடியுள்ளனர். அந்த நாளில்தான் ஜூலியஸ் சீசர் படுகொலை செய்யப்பட்டார் என்பதால், 'ஐடஸ் ஆப் மார்ச்' என்பது துரதிருஷ்டத்தை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் மார்ச் 14-15ம் தேதி நள்ளிரவில்தான் பணம் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.