
பர்மிங்காம்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பர்மிங்காமில் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 587 ரன்களும், இங்கிலாந்து 407 ரன்களும் குவித்தன. 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 6 விக்கெட்டுக்கு 427 ரன்னில் 'டிக்ளேர்' செய்து 608 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
பின்னர் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 68.1 ஓவர்களில் 271 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அட்டகாசமான வெற்றியை பெற்றது. இங்கிலாந்து தரப்பில் ஜேமி சுமித் 88 ரன்கள் அடித்தார். வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இவ்விரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 10-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் தாங்கள் அடைந்தது குறித்து இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளரான பிரண்டன் மெக்கல்லம் சில கருத்துகளை கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இந்த போட்டியை திரும்பி பார்க்கையில் நாங்கள் டாஸ் வென்றபோது வாய்ப்பை தவற விட்டோம். அது நியாயமானது. பிட்ச் இப்படி இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதை நாங்கள் கொஞ்சம் தவறாக கணக்கிட்டோம். 200 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறிய நிலையை நாங்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். டாஸ் வென்று நன்றாக பவுலிங் செய்வோம் என்ற நம்பிக்கையுடன் விளையாடும் நீங்கள் எதிரணி 580 ரன்கள் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்க மாட்டீர்கள். அங்கிருந்தே நாங்கள் பின் தங்கினோம். இதற்காக நாங்கள் எங்களுடைய திட்டங்களை மாற்றப்போவதில்லை. பிட்ச் வேறு மாதிரியாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அது அப்படி அமையவில்லை" என்று கூறினார்.