
டேராடூன்,
உத்தரகண்ட் மாநிலம் பவுரி மாவட்டம் ஜமும் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ் பதுலா. இவரது மனைவி குட்டி தேவி பதுலா. இவர் நேற்று காட்டிற்கு அருகில் உள்ள தனது வயலில் வேலைக்குச் சென்றார். அப்போது தனது வளர்ப்பு நாயையும் தன்னுடம் அழைத்துக்கொண்டு சென்றார்.
இந்நிலையில் காட்டு வழியாக சென்றுகொண்டிருந்தபோது ஒரு புலி குட்டி தேவியை திடீரென பாய்ந்து தாக்கியது. இதனை சற்றும் எதிர்பாராத குட்டி தேவி கத்திக் கூச்சலிட்டார். அது காட்டு பகுதி என்பதால் அங்கு வேறு யாரும் இல்லை இதனால் அவர் புலியிடம் வசமாக சிக்கிக்கொண்டார். பின்னர் அந்த புலி அவரின் உடலை காட்டுக்குள் சுமார் 300 மீட்டர் வரை இழுத்துச்சென்றது. அப்போது அங்கிருந்த நாய் புலியைத் துரத்திச் சென்று குரைத்ததால், விலங்கானது அங்கிருந்து ஓடிச்சென்றது.
இதனையடுத்து மாலை 5 மணியாகியும் தனது மனைவி வீட்டிற்கு வரவில்லை என்பதால் ராஜ் பதுலா வயலுக்கு அவரை தேடிச்சென்றார். அங்கு செல்லும் வழியில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. அந்த சத்தத்தை பின் தொடர்ந்து சென்ற ராஜ் பதுலாவிற்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு அவரது மனைவி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதனைக்கண்ட ராஜ் பதுலா அதிர்ச்சியில் உரைந்தார்.
பின்னர் தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு இறந்து கிடந்த குட்டி தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் தலை மற்றும் பின்புறத்தில் புலியின் பற்கள் மற்றும் நகங்களின் அடையாளங்கள் காணப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து அந்த கிராமத்திற்கு சுமார் 10 வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆங்காங்கே கேமராக்களும் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இறந்தவரின் குடும்பத்திற்கு உடனடி நிவாரனமாக வனத்துறை ரூ.2 லட்சம் வழங்கியுள்ளது.