பெண்ணிற்கு குழந்தை பாக்கியம் கொடுப்பதாக கூறி...போலி மந்திரவாதி செய்த விபரீத செயல்

4 hours ago 1

லக்னோ,

அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சி எனப் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில்கூடப் பிற்போக்கான, மூடத்தனமான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நவீன அறிவியலின் அத்தனைப் பயன்களையும் அனுபவித்துக்கொண்டே, இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளையும் மக்கள் எப்படி ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

இந்த மூட நம்பிக்கைகளும், சம்பவங்களும் ஏறத்தாழ அனைத்து நாடுகள், இனங்கள், மதங்களிலும் இருக்கின்றன. அறிவியல்ரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் மிகவும் வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளிலும்கூட இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகள் பெருவாரியாக இருக்கின்றன.

இந்தநிலையில், உத்தர பிரதேச மாநிலம் அசம்கரின் பஹேல்வான்பூர் என்ற கிராமத்தை சேர்தவர் அனுராதா (வயது 35) இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில், அருகில் உள்ள ஒரு மந்திரவாதியிடம் செல்லுமாறு ஒருவர் கூறியுள்ளார். அனுராதாவின் தாயும், மாமியாரும் அவரை மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றனர்.

மந்திரவாதி, அனுராதாவின் குழந்தையின்மைக்கு காரணம் அவரது உள்ளே இருக்கும் பேய் தான் என்று கூறியுள்ளார். குழந்தை பாக்கியம் வேண்டும் என்றால் அந்தப் பேயை விரட்டுவதற்கு ரூ.1 லட்சம் தர வேண்டும் என்றும் போலி மந்திரவாதி கேட்டுள்ளார். இதனை அடுத்து, பணம் பெற்றவுடன் பேயை விரட்டுவதற்காக அனுராதாவின் தலைமுடியை பிடித்து இழுத்து, வலுக்கட்டாயமாக கழிப்பறை நீரை குடிக்க வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, "பெரிய பேய் உள்ளே இருக்கிறது, அவ்வளவு எளிதில் அது போகாது" என்று கூறி, உருட்டுக்கட்டையால் கடுமையாக அனுராதாவை தாக்கி உள்ளார்.

இந்தக் கொடூர தாக்குதலால் அனுராதாவின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவரை தாயும், மாமியாரும் என்ன செய்வது என்று தெரியாமல் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர், செல்லும் வழியிலேயே அனுராதா பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து, சம்பவம் குறித்து அறிந்த மந்திரவாதி, அவரது மனைவி மற்றும் அவரது உதவியாளர்கள் தலைமறைவாகிவிட்டனர். தற்போது, மந்திரவாதி மட்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவாகியுள்ள மூன்று நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article