விருத்தாசலம், நவ. 21: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள பெலாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை மகன் தங்கதுரை(41), விவசாயி. இவர் அதே பகுதியை சேர்ந்த செல்வக்குமாரி என்ற பெண்ணிடம் இடம் வாங்குவதற்கு பேசி முடிவு செய்து நேற்று பெண்ணாடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதற்கான பத்திரப்பதிவு செய்வதற்காக தங்கதுரை தனது அண்ணன் கொளஞ்சி (48) என்பவருடன் சென்றிருந்தார். இதற்காக முருகன்குடியில் தான் சேமிப்பு வைத்திருந்த வங்கியில் இருந்து ரூ.4 லட்சத்து 5 ஆயிரத்து 700 ரொக்க பணத்தை எடுத்து அண்ணன் கொளஞ்சியின் பைக்கில் உள்ள பெட்டியில் பணத்தை வைத்துக்கொண்டு பெண்ணாடம் சார்பதிவாளர் அலுவலகம் சென்றிருந்தனர்.
சார் பதிவாளர் அலுவலகத்தின் எதிரே உள்ள எழுத்தர் உள்ள பகுதியில் பத்திரம் எழுதும் வேலையை முடித்துக் கொண்டு பைக் பெட்டியில் உள்ள பணத்தை எடுக்க தங்கதுரை சென்று பார்த்தபோது பைக் பெட்டி திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து பெட்டியின் உள்ளே பார்த்தபோது அதில் இருந்த பணம் காணாமல் போயிருந்ததை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்து கத்தி கதறி கூச்சல் போட்டார். தொடர்ந்து பெண்ணாடம் காவல்துறைக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பெண்ணாடம் போலீசார் அப்பகுதியில் உள்ளவர்களை விசாரித்தனர். ஆனால் துப்பு எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் தங்கதுரை பணத்தை எடுத்த வங்கியில் இருந்து மர்ம நபர்கள் யாரோ அவரை நோட்டமிட்டு வந்து பைக் நிறுத்தி இடத்தில் பெட்டியில் கள்ள சாவி போட்டு திறந்து பணத்தை எடுத்து சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தங்கத்துரையிடம் புகார் பெற்று அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பெண்ணாடம் சார் பதிவாளர் அலுவலகம் அருகில் பைக் பெட்டியில் இருந்த ₹4.05 லட்சம் திருட்டு appeared first on Dinakaran.