விருத்தாசலம், ஜன. 18: விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் அருகே உள்ள கோவிலூர் கிராமத்தில் நேற்று முன்தினம் பொங்கல் விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாரியம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் சிறுவர், சிறுமிகளின் நடனம் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த சிதம்பரம் மகன் அருள்முருகன்(42) என்பவர் குடிபோதையில் மேடையில் ஆடுவதற்கு ஏறியுள்ளார்.
இதனை அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் வீரச்செல்வம் (36) மற்றும் அவரது சகோதரர்கள் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் அருள்முருகனுக்கும், வீரச்செல்வன் தரப்பினருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், வீரச்செல்வன் தரப்பினர் தட்டி கேட்டதால் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதை தொடர்ந்து அருள்முருகன் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அருள்முருகனை பின் தொடர்ந்து சென்ற வீரச்செல்வம், அவரது சகோதரர்கள் பன்னீர்செல்வம் (27), தீபக் செல்வம்(24), உறவினர் சண்முகம் மகன் ஏழுமலை(24), செல்வதுரை மகன் மணிகண்டன் (27) மற்றும் சிலர் சேர்ந்து அருள்முருகனை சரமாரியாக தாக்கியதுடன், கையில் வைத்திருந்த கத்தியால் அருள்முருகனை சரமாரியாக குத்திவிட்டு தப்பினர். இதில் பலத்த காயம் அடைந்த அருள்முருகன், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார்.
இதையறிந்த அருள்முருகனின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அருள்முருகனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து அருள்முருகன் கொடுத்த புகாரின்பேரில் பெண்ணாடம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாக்யராஜ், தனசேகர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரச்செல்வம், அவரது சகோதரர்கள் பன்னீர்செல்வம், தீபக் செல்வம், மற்றும் ஏழுமலை, மணிகண்டன் (27) ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அக்கிராமத்தில் பெண்ணாடம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
The post பெண்ணாடம் அருகே பதற்றம் பொங்கல் விழாவில் தகராறு: வாலிபருக்கு கத்திக்குத்து appeared first on Dinakaran.