விருத்தாசலம், மார்ச் 28: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் மற்றும் போலீசார், நேற்று பெண்ணாடம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெண்ணாடம் அருகே உள்ள மாளிகைக்கோட்டம் சுமைதாங்கி பேருந்து நிறுத்தம் அருகில் ஒரு வீட்டில் சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்ததன்பேரில் அங்கு போலீசார் சென்று சோதனை நடத்தினர்.
அதில், கடந்த ஒன்றரை மாதங்களாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து கொண்டு, கஞ்சா விற்பனை செய்து வந்த கொடிக்களம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் கவியரசன்(23), அவரது மனைவி சங்கீதா (27), கவியரசனின் நண்பர் திருவள்ளூர் மாவட்டம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த குமார் மகன் லோகேஷ் (23), சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சீராளன் மகன் தியாகு(24) ஆகியோரை பிடித்து கைது செய்தனர்.தொடர்ந்து வீட்டில் சோதனை செய்து, சமையலறையில் இட்லி சமைக்கும் பாத்திரத்தில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா விற்பனை செய்த ரூ.17 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து இப்பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களுடன் கஞ்சா விற்பனையில் தொடர்பு உள்ள சிலரை தொலைபேசி எண்களை வைத்து தேடி வருகின்றனர். சென்னையில் இருந்து கஞ்சா கடத்தி வந்து பெண்ணாடம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து விற்பனை செய்து வந்த கும்பலை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post பெண்ணாடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து கஞ்சா விற்பனை கணவன், மனைவி உள்பட 4 பேர் கைது 1.250 கிலோ கஞ்சா, ரூ.17 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் appeared first on Dinakaran.