பெண்கள் வைத்துக்கொள்ள வேண்டிய 10 பாதுகாப்புக் கருவிகள்!

3 months ago 12

காவல் துறை, 24 மணி நேரமும் வேலை செய்யும் பாதுகாப்பு துறைகள், வளர்ந்துவிட்ட தகவல் தொடர்பு வசதி, பெண்கள், குழந்தைகளுக்காக இயங்கும் பிரத்யேக காவலர் அமைப்பு இப்படி எத்தனை வசதிகள் பெருகினாலும் இன்னமும் குற்றங்களை தடுக்க இயலவில்லை. செய்தித் தாள்களைத் திறந்தாலே பெண் பாலியல் வன்கொடுமை அல்லது அது சார்ந்து நிகழும் வழக்குகள் குறித்த செய்திகள் இல்லாமல் நம்மால் செய்தித் தாள்கள், டிவி, யூடியூப் சேனல்களைக் கடக்க இயலவில்லை. எனில் நாமும் நம் பாதுகாப்பை உறுதி செய்துகொள்வது நல்லது. தினந்தோறும் வெளியில் வேலைக்கு, கல்லூரி, பள்ளி எனச் செல்லும் பெண்கள் சில முக்கியமான பாதுகாப்பு உபகரணங்களை தங்களது கைப்பையில் வைத்துக்கொள்வது அவசியம். ஒரு பெண்ணின் பையில் இருக்க வேண்டிய பத்து பாதுகாப்பு கருவிகள் இதோ.

பெப்பர் ஸ்ப்ரே
(Pepper Spray)

திடீரென தாக்குதலோ, அல்லது கடத்தவோ முயற்சித்தால் இந்த பெப்பர் ஸ்ப்ரே டப்பாக்களை பயன்படுத்தி கயவனிடம் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். இவைகள் கீசெயின்களாகவே தற்போது ஆன்லைன், நேரடி கடைகளில் ரூ. 200 முதல் கிடைக்கின்றன.

எச்சரிக்கை அலாரம்
(Personal Alarm)

இவைகள் சார்ஜர் செய்துகொள்ளும் முறையில் வருகின்றன. கீசெயின்களாக ஹேண்ட்பேக், பேக்பேக், மொபைல் கவர்களில் கூட தொங்க விட்டுக் கொள்ளலாம். ஆபத்து என்றால் இதில் இருக்கும் பட்டனை அழுத்தினால் சுமார் 500மீ சுற்று வட்டாரம் வரை எச்சரிக்கை ஒலி எழுப்பும். இதனால் அக்கம் பக்கத்தில் இருப்போரிடமிருந்து உதவிகள் கிடைக்கும். ரூ. 300 முதல் எலக்ட்ரிக்கல் கடைகள், ஆன்லைன் ஷாப்பிங்குகளில் கிடைக்கும்.

தந்திரோபாய பேனா (Tactical pen)

என்னால் எதிர்த்து சண்டையிடும் அளவுக்கு கொஞ்சம் வொர்கவுட், பாடி பில்டிங், கராத்தே, உள்ளிட்ட சில சின்ன ஆயத்தங்கள் தெரியும் எனில் இந்தப் பேனா இன்னும் அவர்களுக்கு உதவியாக இருக்கும். இந்தப் பேனாக்கள் ஒரு பக்கம் பேனாவாகவும், மறுமுனையில் கூர்மையான ஆயுதமாகவும் இருக்கும். சட்டென தாக்கி தப்பித்துக்கொள்ள இந்தப் பேனாக்கள் உதவும். ரூ. 250 முதல் இந்தப் பேனாக்கள் விற்பனைக்கு உள்ளன.

அவசர உதவி விசில் (Emergency whistle)

இவைகள் ரூ. 10 முதல் ரூ. 1000 வரையிலும் சார்ஜ் செய்துகொள்ளும் கீ செயின்கள் மாடல்கள் வரையிலும் கூட உள்ளன. மரச்சாமான்கள் விற்கும் கடைகளில் கூட இந்த ரூ.10இல் விசில்கள் உள்ளன. கிட்டத்தட்ட போலீஸ் விசில் போலவே சப்தம் எழுப்பும் விசில்களும் கூட கடைகளில் விற்பனைக்கு உள்ளன. குறைந்தபட்சம் இவற்றையாவது பெண்கள், பெண் குழந்தைகள் அவர்கள் பைகளில் வைத்துக்கொள்வது அவசியம்.

அடிப்படை முதல் உதவி (Basic First Aid)

இருசக்கர வாகனம், கார் இவற்றில் பயணிக்கும் போது, நீண்ட தூரம் பயணம் அல்லது சுற்றுலா செல்லும் பெண்கள் நிச்சயம் வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்று முதல் உதவி பெட்டி. சிறிய கண்ணாடி வைக்கும் டப்பாக்களில் கூட ஒரு சிறிய ரோல் பஞ்சு, ஒரு பேண்ட் எய்ட், ஒரு சிறு பாட்டில் டிஞ்சர், வலி நிவாரணி ஸ்ப்ரே, தலைவலி, காய்ச்சல் மாத்திரைகள் இரண்டு, இவைகளை வைத்துக்கொள்ளலாம்.

பவர் பேங்க்
(Power Bank)

பலாயிரங்கள் கொடுத்து ஒரு மொபைல் வாங்குகிறோம் ஆனால் ரூ. 500 – ரூ. 2000க்கு ஒரு பவர் பேங்க் வாங்குவதற்கு யோசிக்கிறோம். எப்பேற்பட்ட மொபைலானாலும் புது மொபைல்கள் தவிர மற்றவை அதிகபட்சம் 12 மணி நேரங்கள் மட்டுமே சார்ஜ் நிற்கும். என்கையில் பவர் பேங்க் அவசியம். ஒரு ஆபத்து என்றால் கூட உங்களுக்கு உதவ ஒரே வழி உங்கள் மொபைல் மட்டுமே. மொபைல் சிக்னல் மூலம் காப்பற்றப்பட்ட பெண்கள் எண்ணிக்கை ஏராளம் என்கையில் டெக்னாலஜியை சரியாக பயன்படுத்தினால் பாதுகாப்பும் கிடைக்கும்.

பாதுகாப்பு செயலிகள்
(Safety Apps)

நாம் பயன்படுத்தும் டாக்ஸி செயலிகள் துவங்கி அத்தனையிலும் SOS வசதி உண்டு. ஆனால் இவற்றை பெரும்பாலும் நாம் கவனிப்பதில்லை. நாம் புக் செய்த ஒரு காரோ, ஆட்டோவோ சந்தேகத்திற்கு இடமாக வேறு பாதையில் சென்றால் அல்லது ஓட்டுநரிடம் ஏதேனும் சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் தென்பட்டால் உடனுக்குடன் SOS வசதியை அழுத்தலாம்.

காவல் உதவிகள்
(Police Helplines)

இன்று காவல் துறையும் அந்தந்த ஊருக்கு ஏற்ப பல வழிகளில் பாதுகாப்பு வசதிகள் பலவும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். காவல் துறை உதவிகள் அழைப்பு எண்கள், செயலிகளை உங்கள் மொபைல்களில் தரவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள். தமிழ்நாட்டில் காவல் உதவி (Kaval Uthavi)என்கிற செயலி 24/7 சேவையில் இந்தச் செயலியை இயக்கி வருகிறது. இதிலிருக்கும் சிவப்பு நிற பட்டனை அழுத்தினால் நீங்கள் இருக்கும் இருப்பிடத்துடன் உதவி வேண்டி எச்சரிக்கை அருகில் இருக்கும் காவல் மையத்திற்கு சென்றுவிடும். மேலும் ஏரியா பிரச்னைகள் என்றால் கூட இந்தச் செயலியில் மொபைல் மூலமாகவே புகார் தெரிவிக்கும் வசதியும் உள்ளன. 1098 எண்ணை அழைத்தால் குழந்தைகளுக்கான பாதுகாப்பு, 181 எண்ணை அழைத்தால் பெண்களுக்கான பாதுகாப்பு வசதிகள் அவசர கால அடிப்படையில் கிடைக்கும். இப்படியான அவசர பாதுகாப்பு, உதவி எண்களையும் மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டால் இன்னும் சிறந்தது.

பணம் (Small Amount)

டிஜிட்டல் யுகம் வளர்ந்தாலும் இன்னும் சில இடங்களில் பணம் தான் உதவும். எப்போதும் அவசரத்துக்குப் பயன்படுத்த ஒரு சிறு தொகை பைகளில் எங்கேயேனும் வைத்திருங்கள். நெட்வொர்க் கவரேஜ் இல்லாத இடங்களில் குறைந்தது ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கவாவது பயன்படும்.

அவசர தொடர்பு
(Emergency Contact)

மொபைலின் இந்த வசதியை பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை. அவசர உதவி என்னும் வசதியின் உங்கள் குடும்பம் மற்றும் அழைத்தால் உடனுக்குடன் உதவி கிடைக்கும் எண்களை சேமியுங்கள். உடன் காவல் உதவி அழைப்புகளையும் இதில் சேமிக்கலாம். இதெல்லாம் மொபைல் போன் லாக்கில் இருந்தாலும் உடனுக்குடன் பாதுகாப்புக் கொடுக்கும் வசதிகள். மேலும் பெண்கள் பாதுகாப்பு கிட் என்னும் பெயரில் தற்போது கலர்ஃபுல்லாக, ஃபேனியாகவே விற்பனைக்கு உள்ளன. மால்கள், எலக்ட்ரிக் ஷோரும்கள், ஆன்லைன் தளங்களில் கூட இவை முழு செட்டாக வாங்கலாம். எவ்வளவோ செலவு செய்கிறோம் நம் பாதுகாப்புக்கும் அதில் சிறு தொகை ஒதுக்கலாம்.
– ஷாலினி நியூட்டன்.

The post பெண்கள் வைத்துக்கொள்ள வேண்டிய 10 பாதுகாப்புக் கருவிகள்! appeared first on Dinakaran.

Read Entire Article