இலுப்பூர் திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா: 100க்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டு ஊர்வலம்

3 hours ago 4

கீழ்வேளூர், மே 21: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த இலுப்பூர் திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த இலுப்பூர் திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா நேற்று முன்தினம் இரவு பூச்சொரிதல் விழா, கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. நீண்ட நாள் திருமணம் நடைபெறாத ஆண் மற்றும் பெண்கள் அமாவாசையன்று திரவுபதியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து கோயிலில் உள்ள அரவானுக்கு பரிகார பூஜை செய்து, அரவான் கழுத்தில் மஞ்சள் மற்றும் கயிறை தாலியாக கட்டினர். இவ்வாறு செய்வதால், திருமண தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. இதனால் மாதந்தோறும் அமாவாசை அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

மேலும் திருவிழாவின் போது அரவான் களப்பலி நடைபெறும். அப்போது சேவல் பலியிட்டு அதன் ரத்தத்தை சாதத்துடன் கலந்து வழங்கப்படும். இந்த பலிசோறு பிரசாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது மற்றொரு நம்பிக்கை. இந்த இலுப்பூர் திரவுபதியம்மன் கோயில் 9 நாள் திருவிழா நேற்று முன்தினம் இரவு பூச்சொரிதலுடன், கொடி ஏற்றப்பட்டு தொடங்கியது. முன்னதாக கோயில் தெரு குளத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக பூந்தட்டுகள் சுமந்து கோயிலுக்கு வந்தனர். பெண்கள் கொண்டு வந்த பூக்களை கொண்டு பூச்செரிதல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அம்மன் வீதியுலா நடைபெற்றது. இதையடுத்து அன்றுமுதல் தாழ்ந்திருவாசல் மணிபாகவதரர் குழுவினரால் மகாபாரத் கதை தினம்தோறும் நடைபெற்று வருகிறது.

மகாபாரத கதையில் நேற்று கிருஷ்ணன் பிறப்பு, இன்று அம்பாள் பிறப்பு, நாளை கமலக்கண்ணி திருமணம், 23ம் தேதி திரௌபதி அம்மன் அர்ஜுனன் திருக்கல்யாணம், 24ம் தேதி பாஞ்சாலி துயில் தருதல் அர்ஜுனன் தபசு நடைபெற்றும். தொடர்ந்து 25ம் தேதி அரவான் களப்பலி நடைபெற்று, 26ம்தேதி காலை திமிதி திடலில் படு களமும், அம்மன் கூந்தல் முடித்தலும் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து முக்கிய விழாவான தீமிதி திருவிழா அன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறுகிறது. 27ம் தேதி தர்மர் பட்டாபிஷேகம் நடைபெற்று கொடி இறக்கப்படுகிறது. மறுநாள் 28ம் தேதி விடையாற்றியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராமவாசிகள், இளைஞர் நற்பணி மன்றத்தினர், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

The post இலுப்பூர் திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா: 100க்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டு ஊர்வலம் appeared first on Dinakaran.

Read Entire Article