பெண்கள் டி20 உலகக் கோப்பை: அரையிறுதி வாய்ப்பில் இந்தியா நீடிக்குமா? இலங்கையுடன் இன்று மோதல்

3 months ago 22

துபாய்,

9-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த போட்டி தொடரில் இன்று (புதன்கிழமை) இரவு துபாயில் நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் கோதாவில் குதிக்கின்றன.

ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 58 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அடுத்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

அத்துடன் ரன்ரேட்டிலும் ஏற்றம் காண வேண்டியது முக்கியம். இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 19-ல் இந்தியாவும், 5-ல் இலங்கையும் வென்று இருக்கின்றன.

ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. உலகக் கோப்பையில் 5 ஆட்டங்களில் சந்தித்ததில் 4 ஆட்டத்தில் இந்தியாவும், ஒரு ஆட்டத்தில் இலங்கையும் வென்று இருப்பதும் இதில் அடங்கும். இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

 

Read Entire Article