பெண்கள் சிறந்த துப்பறிவாளர்கள்!

1 week ago 6

நன்றி குங்குமம் தோழி

நிதானம், தெளிவான சிந்தனை, விடாமுயற்சி இவையே துப்பறிவாளர்களின் அடையாளம். துப்பறியும் துறையில் பல்வேறு சவால்கள் நிறைந்திருந்தாலும் ஒரு சிறந்த தனியார் துப்பறிவாளராக வலம் வருகிறார் தில்லியை சேர்ந்த பாவனா பாலிவால். “ஒரு பக்கம் குடும்பத்தினர் கூட பேசிக்கிட்டு இருப்போம், அடுத்த நிமிஷமே இன்னொரு பக்கம் வழக்கில் சந்தேகப்படுகிற நபரை உளவு பார்த்து பிடிக்க வேண்டியது இருக்கும்” என துப்பறிவு வேலையின் போக்கை சுட்டிக் காட்டுகிறார் பாவனா. தில்லியில் ‘தேஜாஸ் டிடெக்டிவ்ஸ்’ என்ற பெயரில் தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றை அமைத்து அதனை நிர்வகித்து வருகிறார்.

தான் ஒரு துப்பறிவாளர் என்பது சுற்றி இருப்பவர்களுக்கு தெரியாமல் இருப்பதே நல்லது என கருதும் பாவனா, துப்பறியும் துறையில் களம் இறங்குவது அவ்வளவு எளிதல்ல என்றாலும், தன் வாழ்க்கையில் தனித்துவமான வேலையினை செய்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்.பத்திரிகை துறையில் படித்த இவர், செய்தித்தாள் ஒன்றில் பணிபுரிந்து பின்னர் பணியில் விருப்பமின்றி வேறு வேலைகளை தேடத் தொடங்கிய போதுதான் ஒரு டிடெக்ட்டிவ் ஏஜென்சியின் விளம்பரம் இவரின் கண்ணில் பட்டுள்ளது. ஏன் இந்த வேலையை நாம் செய்யக்கூடாது என யோசித்த பாவனா டிடெக்ட்டிவ் ஏஜென்சியில் பணியில் சேர்ந்தார்.

“IPS ஆக இருந்த கிரண் பேடியை என் சிறுவயதிலிருந்தே நான் வியந்து பார்த்திருக்கிறேன். அவரைப்போல இருக்க வேண்டுமென விரும்பினேன். பணியில் சேர்ந்ததும் ஒரு பெண்ணை துப்பறியும்படி எனக்கு கொடுக்கப்பட்ட முதல் வேலையிலேயே ஒரு சவாலை சந்தித்தேன். துப்பறிய வேண்டிய பெண்ணின் அப்பா என்னை யார் அனுப்பியது என கேட்டுவிட்டார். மாட்டிக்கொள்ள கூடாதென சாமர்த்தியமாக பதில் பேசினேன். சொன்னதை நம்பினாரா என்றுகூட தெரியாது. அவர் முன்னாள் புலனாய்வு பிரிவு அதிகாரி என்பது பின்னர்தான் எனக்கு தெரிந்தது. ஆனால் நான் துப்பறிய வேண்டிய தகவலை மட்டும் சரியாக கண்டுபிடித்து வந்துவிட்டேன்” என தன் முதல் பணி அனுபவத்தை கூறும் பாவனா, பின்னாளில் பெண்கள் சம்பந்தப்பட்ட அனைத்து வழக்குகளையும் தானே கையாளும் வகையில் துறையில் முன்னேற்றம் அடைந்து, தான் பணிபுரியும் ஏஜென்சியின் மகளிர் பிரிவில் தலைமை பொறுப்பேற்றார்.

“நான் துப்பறிவாளர் என்பதை என் வீட்டில் சொல்லவே இல்லை. ஒருநாள் பத்திரி கையில் என் சுயவிவரங்கள் வெளியான போதுதான் அவர்களே பார்த்து தெரிந்துகொண்டனர். விஷயம் தெரிந்த பின்னும் வீட்டில் எல்லோரும் எனக்கு ஆதரவு கொடுத்தனர். இந்த துறையில் பணிபுரியும் சில ஆண்கள், பெண்களால் சரியாக துப்பறிய முடியாது என்பார்கள். ஆனால் என் அனுபவத்தில் பெண்கள்தான் சிறந்த துப்பறிவாளர்களாக இருக்கிறார்கள்.

துப்பறியும் கலை பெண்களிடம் இயல்பாகவே இருக்கிறது. இந்தத் துறையில் சிறந்து விளங்க சிறந்த வழிகாட்டி கிடைத்துவிட்டால் போதும். அப்போது என் வழிகாட்டி சின்னப் பெண்ணாக இருந்த என் மீது நம்பிக்கை வைக்கவில்லையெனில், என்னால் தடைகளை தகர்த்திருக்க முடியாது. துறை சார்ந்த அனுபவத்தில் என் மனக்குறை என்னவென்றால், சில பெண்களும் கூட IAS போன்ற உயர் அதிகாரிகளை ஏமாற்றி திருமணம் செய்கின்றனர். இல்லையேல் மிரட்டுகின்றனர். பெண்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை துப்பறியும் போது சற்று குற்ற உணர்வாக இருக்கும்” எனும் பாவனா பாலிவால் தன் பாதுகாப்புக்காக தற்காப்புக் கலையை கற்றும், பெப்பர் ஸ்பிரேவை எப்போதும் உடன் வைத்துக் கொண்டும்தான் உலவுகிறார்.

தொகுப்பு; ரம்யா ரங்கநாதன்

 

The post பெண்கள் சிறந்த துப்பறிவாளர்கள்! appeared first on Dinakaran.

Read Entire Article