
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஸ்டப்னில் நாகேஷ் மலி(வயது 28) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிறுவனத்தில் உள்ள பெண்களுக்கான கழிவறைக்கு ஒரு பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயர் சென்றார். அப்போது பக்கத்தில் உள்ள ஆண் ஊழியருக்கான கழிவறை சுவரில் செல்போன் இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே பதறி அடித்து கொண்டு அவர் வெளியே ஓடிவந்தார். பின்னர் ஆண்களுக்கான கழிவறையை பார்த்த போது ஸ்டப்னில் சுவரில் நின்றபடி தனது செல்போன் மூலமாக வீடியோ எடுத்தது தெரியவந்தது. கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் கூச்சலிட்டதால் உயர் அதிகாரி உள்ளிட்டோர் ஓடிவந்தனர். அப்போது பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயரிடம் ஸ்டப்னில் மன்னிப்பு கேட்டார்.
மேலும் அதிகாரியிடமும் ஸ்டப்னில் மன்னிப்பு கோரினார். இதையடுத்து, அதிகாரியும் அவரை கண்டித்ததுடன், மன்னித்து விட்டு விட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பற்றி அந்த பெண் என்ஜினீயர் தனது கணவரிடம் கூறினார். உடனே பெண்ணின் கணவர் நிறுவனத்திற்கு சென்று ஸ்டப்னில் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரியுடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் நடந்த சம்பவங்கள் பற்றி எலெக்ட்ரானிக் சிட்டி போலீஸ் நிலையத்தில் பெண் என்ஜினீயரின் கணவர் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் இன்போசிஸ் ஊழியர் ஸ்டப்னில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஸ்டப்னில் செல்போனை ஆய்வு செய்த போது, 30-க்கும் மேற்பட்ட வீடியோ காட்சிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர், பெண்களுக்கான கழிவறையில் அடிக்கடி செல்போனை வைத்து வீடியோ எடுத்து வந்ததாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. கைதான ஸ்டப்னிலிடம் எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.