
இந்தியா டிஜிட்டல் மயமாகிக்கொண்டு இருக்கிறது. இணையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போன் வைத்து இருப்பவர்கள் அனைவருமே டிஜிட்டல் உலகத்துக்குள் புகுந்துவிட்டனர். இணையதளத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் நாம் உலகளவில் முன்னணியில் இருக்கிறோம். யு.பி.ஐ. பண பரிமாற்றத்தில் சர்வதேச அளவில் அதிக பரிவர்த்தனை நடப்பது இந்தியாவில்தான். சாலையோர கடைகளில் ரூ.10-க்கு காய்கறி வாங்குபவர்கள் கூட கியூ.ஆர். கோடு மூலம் பணம் செலுத்திவிடுகிறார்கள். ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ள அறிவிப்பில், டிஜிட்டல் பரிமாற்றத்தின் மூலம் கடந்த மே மாதத்தில் மட்டும் ரூ.25 லட்சத்து 14 ஆயிரத்து 297 கோடி பரிமாற்றம் நடந்து இருக்கிறது. இதுவரை இல்லாத அளவு இதுதான் உச்ச தொகையாகும்.
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் 97 கோடி இணைய இணைப்புகள் இருப்பதாக பெருமையுடன் கூறியிருக்கிறார். இந்தியாவின் ஆதார், கோவின், டிஜிலாக்கர், பாஸ்டேக் போன்ற டிஜிட்டல் திட்டங்கள் உலகளவில் ஏற்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் இந்தியா திட்டம் வெறும் அரசின் திட்டம் என்று இல்லாமல் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி பூரிப்புடன் கூறியுள்ளார். அவர் சொன்னதற்கு வலு சேர்க்கும் விதமாக ரெயில்வே 'ரெயில்ஒன்' என்ற செயலியை பயணிகளுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் இணையதளம் மூலம் டிக்கெட் எடுக்க சென்றால், அதற்கு ஒரு செயலி அதாவது ஐ.ஆர்.சி.டி.சி. செயலி, முன்பதிவில்லாத டிக்கெட்டுகளுக்கு யு.டி.எஸ். செயலி, பயணத்தின்போது உணவு ஆர்டர் செய்வதற்கு கேட்டரிங் செயலி, டிக்கெட் ரிசர்வேசன் நிலையை பார்க்க அதற்கு ஒரு செயலி, ரெயில் எங்கு வருகிறது?, சரியான நேரத்துக்கு வருகிறதா? என்பதை பார்க்க அதற்கும் தனி செயலி என ஒவ்வொரு சேவைகளுக்கும், ஒவ்வொரு செயலியை பயன்படுத்தவேண்டிய சிரமமான நிலை பயணிகளுக்கு இருந்தது.
ஒரே பயணி ஒரே ரெயிலில் பயணம் செய்யும்போது பல சேவைகளுக்கு பல செயலிகளை பயன்படுத்தினால்தான் வசதியான பயணம் மேற்கொள்ளமுடியும். இதனால் பாமர மக்களுக்கு டிஜிட்டல் சேவையை பயன்படுத்துவது எளிதாக இல்லை. இப்போது இந்த குறைகள் அனைத்தையும் போக்கும் வகையில் அனைத்து சேவைகளுக்கும் ஒரே செயலியாக 'ரெயில்ஒன்' செயலியை ரெயில்வே துறை கொண்டுவந்துள்ளது.
இதன்படி, ரெயில் பயணத்தை மேற்கொள்ளும் ஒரு பயணி இந்த செயலிக்குள் நுழைந்துவிட்டால் டிக்கெட் எடுப்பது, இருக்கை வசதியை உறுதி செய்வது, பயணத்தின்போது உணவுக்கு ஆர்டர் கொடுப்பது, தங்கள் பயணத்தின்போது ஏதாவது குறைகள் இருந்தால் புகார் செய்ய வசதி, நாம் ஏறவேண்டிய ரெயில் எங்கு வந்து கொண்டிருக்கிறது?, சரியான நேரத்துக்கு புறப்படுமா?, தாமதமாக புறப்படுமா? என்பன போன்ற வசதிகளை, சேவைகளை மிக எளிதில் பெற்றுக்கொள்ளமுடியும். மற்றொரு சிறப்பம்சமாக இந்த செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டண சலுகை இருக்கிறது. மேலும் ரெயிலில் இருந்து இறங்கும்போதோ, ஏறும்போதோ சுமை தூக்குபவர்களின் சேவைக்காக பதிவு செய்வது, ரெயில் நிலையத்தில் இருந்து நாம் செல்லும் இடத்துக்காக டாக்சிக்கு பதிவு செய்வது போன்ற வசதிகளும் இதில் வர இருக்கிறது. மொத்தத்தில் ஒரு சுகமான ரெயில் பயணத்துக்கு 'ரெயில்ஒன்' செயலி முழுமையாக உதவிக்கரம் நீட்டுகிறது. எந்தவித சிக்கலும் இல்லாமல் எல்லோராலும் அனைத்து சேவைகளையும் பெற வழிகாட்டும் 'ரெயில்ஒன்' செயலி பயணிகளுக்கு 'நம்பர்ஒன்' செயலிதான்.