பெண்கள் ஆக்கி; இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராணி ராம்பால் ஓய்வு

3 weeks ago 4

புதுடெல்லி,

இந்திய பெண்கள் ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனான அரியானாவை சேர்ந்த ராணி ராம்பால் ஆக்கி போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு தனது 14 வயதில் தேசிய சீனியர் அணியில் முதல்முறையாக இடம் பிடித்த அவரது தலைமையில் 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 4-வது இடம் பிடித்தது.

16 ஆண்டுகளாக இந்திய அணியில் முன்னணி வீராங்கனையாக வலம் வந்த ராணி ராம்பால் 254 சர்வதேச போட்டிகளில் விளையாடி 205 கோல்கள் அடித்துள்ளார். 2022-ம் ஆண்டில் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து ஓரங்கப்பட்டார். அதன் பின்னர், கடந்த ஆண்டு இந்திய சப்-ஜூனியர் பெண்கள் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஓய்வு குறித்து ராணி ராம்பால் கூறியதாவது, ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவள் நான். நிறைய கஷ்டத்தை சந்தித்து இருக்கிறேன். இருப்பினும் நாட்டுக்காக ஆக்கி விளையாடி சாதிக்க வேண்டும் என்பதில் எப்போதும் ஆர்வமாக இருந்தேன். இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடுவேன், 200 கோல்கள் அடிப்பேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.

அதை நினைத்து பெருமைப்படுகிறேன். எனது ஆக்கி பயணம் அற்புதமானது. ஓய்வு முடிவு கடினமானது என்றாலும், சரியான நேரத்தில் எடுத்துள்ளேன். எனது வாழ்க்கையில் அடுத்த இன்னிங்சை ஏற்கனவே தொடங்கி விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article