பெண்களை போற்றுவோம்

1 hour ago 1

வீடுதான் பெண்கள், சிறுமிகளுக்கு ஆபத்தான இடம் என, ஐநா பெண்கள் மற்றும் போதைப்பொருள், குற்றச் செயல்கள் தடுப்பு அமைப்பான யுஎன்டிஓசி அறிக்கை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் குடும்ப உறவுகளால் தினந்தோறும் 140 பெண்கள் கொலையாகின்றனர். 2023ல் மட்டும் சுமார் 85 ஆயிரம் பெண்கள், சிறுமிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் சுமார் 51 ஆயிரம் பேர், கணவர், தந்தை, தாய் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களால் கொலையாகியுள்ளதாக யுஎன்டிஓசி வெளியிட்ட அறிக்கையானது, நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக, வல்லரசு நாடான அமெரிக்காவில் கூட, பெண்கள் அதிகளவு குடும்ப உறுப்பினர்களாலேயே கொலையாகி உள்ளனர். ஒரு லட்சம் பெண்கள் என்ற கணக்கெடுப்பின்படி, முதலிடத்தில் உள்ள ஆப்ரிக்காவில் 2.9, 2வது இடத்தில் அமெரிக்காவில் 1.6, 3வது இடத்தில் ஓசியானியாவில் 1.5 பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆசியாவில் இது 0.8 என்ற வகையில் உள்ளது. அதாவது, 60 சதவீத பெண்கள் குடும்ப உறுப்பினர்களாலேயே கொலையாகியுள்ளனர்.
குடும்ப உறுப்பினர்களிடையே சகிப்புத்தன்மை குறைவதே இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர் மனநல ஆராய்ச்சியாளர்கள். அதாவது, தம்பதிக்குள் கருத்தொற்றுமை குறைந்து வருகிறது.

வெளிநபர்களிடையே இருந்த போட்டி, பொறாமை, வெறுப்புணர்வு போன்றவை குடும்ப உறுப்பினர்களிடையே அதிகரித்து விட்டது. இது ஒரு எல்லையை தாண்டி கொலை செய்யுமளவுக்கு சென்று விடுகிறது. ஈகோவே இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாறி வரும் நவீன உலகில் பழக்க, வழக்கங்களில் ஏற்படும் மாற்றம், மது உட்பட போதைப்பொருட்களின் பயன்பாடு, பணத்தட்டுப்பாடு, சொத்து பிரச்னை, முறைகேடான உறவு முறைகள் இப்படி பல விஷயங்கள்தான் முதன்மையான காரணங்களாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.

கொரோனா காலத்தில் குடும்ப வன்முறையானது, உலகளவில் வழக்கத்தை விட 40 சதவீதம் வரை அதிகரித்திருந்தது. வீட்டுக்குள் முடங்கி கிடத்தல், பணம் இல்லாமை, ஒத்துப்போகாமை உள்ளிட்ட காரணங்கள் அப்போது கூறப்பட்டன. குற்ற ஆவண காப்பக அறிக்கையின்படி, ஆண்டுதோறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சுமார் 5 சதவீதம் வரை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2016 – 2021 வரை கணக்கிட்டதில், 26.59 சதவீதம் வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய மகளிர் ஆணைய தகவலின்படி, 2023ல் பெண்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் 28,811 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் குடும்ப வன்முறை பிரிவில் மட்டும் 6,274 புகார்கள் பதிவாகியுள்ளன. இதில் 16,109 புகார்கள் (55 சதவீதம்) கூறப்பட்ட மாநிலமாக உபி திகழ்கிறது. தலைநகர் டெல்லியில் 2,411, மகாராஷ்டிராவில் 1,343 புகார்கள் பதிவாகியுள்ளன. குடும்ப வன்முறையில் அதிகளவு பெண்களும், பாலியல் உள்ளிட்ட பிரச்னைகளில் சிறுமிகளும் அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வறிக்ைக அச்சுறுத்தல் தருகிறது.

என்னதான் உலகில் சரி சமமாக பெண்கள் போற்றப்பட்டாலும், அவர்களுக்கு எதிரான வன்முறைகள் ெதாடர்ந்தவண்ணம்தான் உள்ளன. ஒரு பெண் வெளியே செல்லும்போது, பலவிதமான இன்னல்களை எதிர்கொள்கிறாள். ஆனால், அவள் போற்றப்படும் வீட்டில், குடும்ப வன்முறை உள்ளிட்ட பல விஷயங்களால் பாதிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். பல குடும்பங்கள் சேர்ந்ததே ஒரு நாடு, குடும்ப ஒற்றுமையே நாட்டை வலுப்படுத்தும் சக்தி என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

The post பெண்களை போற்றுவோம் appeared first on Dinakaran.

Read Entire Article