மேட்டூர், நவ.28: சேலம் மேட்டூரில் ஆயிரக்கணக்கானோர் தினமும் திரளும் அணை பூங்காவில் பழுதாகி கிடக்கும் விளையாட்டு உபகரணங்களை பராமரித்து, பூங்காவை சீரமைக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேட்டூர் அணையை ஒட்டி 33 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது மேட்டூர் அணை பூங்கா. எல்.பி.எஸ் பூங்கா (லேடி பிரடரிக்ஸ்டேன்லி) என்ற பெயரும் இதற்கு உண்டு. ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் சென்னை மாகாண கவர்னராக இருந்த பிரடரிக் ஸ்டேன்லி மனைவி பெயர், இந்த பூங்காவிற்கு சூட்டப்பட்டுள்ளது. மேல் பூங்கா 11ஏக்கர் பரப்பிலும், கீழ் பூங்கா 22 ஏக்கர் பரப்பிலும் உள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பூங்காவிற்கு வந்து செல்கின்றனர். ஆடிப்பெருக்கு போன்ற திருவிழாக்காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்களை கவரும் வைகியில் கான்கிரீட் சிற்பங்களும், மான்பண்ணை, மீன்காட்சி சாலை, முயல்பண்ணை, பாம்புபண்ணை, சிறுவர் பூங்கா, செயற்கை நீரூற்று போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. குடும்பம் குடும்பமாக அணை பூங்காவிற்கு சென்று புல்தரையில் அமர்ந்தும் நிழல்தரும் மரங்களின் அடியில் அமர்ந்தும் மகிழ்வார்கள். சிறுவர்களும் பெரியவர்களும் வயது வித்தியாசமின்றி ஊஞ்சலாடியும் சறுக்கி விளையாடியும் மகிழ்வார்கள். உள்ளூர்வாசிகளும் அதிகளவில் வந்து பொழுதை கழித்து செல்வார்கள். இதனால் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டித்தரும் பூங்காவாகவும், மேட்டூர் அணைப்பூங்கா திகழ்கிறது. இந்த பூங்காவில் கடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக சேதாரங்கள் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து மேட்டூர் பகுதி மக்கள் கூறுகையில், ‘‘அணைபூங்கா குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தரும் ஒரு இடமாக உள்ளது. ஆனால் இங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் பழுதாகி கிடக்கிறது, ஒரு ஊஞ்சல் முற்றிலும் முறிந்து விழுந்து துருப்பிடித்து காணப்படுகிறது. மற்றொரு ஊஞ்சல் மேல் பகுதி உடைந்துள்ளது. சிறுவர் சிறுமியர் விளையாடும் பகுதியில் பெரிய மரம் ஒன்று முழுவதும் காய்ந்த நிலையில் உள்ளது. நீச்சல் குளம் பராமரிப்பின்றி காய்ந்து கிடக்கிறது. பூங்கா முழுவதும் எச்சில் இலைகளும் பிளாஸ்டிக் கவர்களும், குப்பைகளும் தேங்கி கிடக்கிறது.சிறுவர்கள் சறுக்கி விளையாடும் சாதனம் ஒட்டை விழுந்துள்ளது. இதில் விளையாடினால் அவர்களுக்கு காயங்கள் ஏற்படுகிறது. இன்னொரு பகுதியில் சறுக்கு விளையாட்டு சாதனத்தில் யாரும் செல்ல முடியாதபடி வலைகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பூங்காவை பராமரித்து சீரமைக்க வேண்டும். அதிகாரிகள் இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.
The post மேட்டூர் அணை பூங்காவில் பழுதாகி கிடக்கும் விளையாட்டு உபகரணங்கள் appeared first on Dinakaran.