தினசரி காய்கறி மார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் வருகை சரிவு

2 hours ago 2

சேலம், நவ.28: சேலத்தில் மழை, குளிர் காரணமாக சேலம் கடைவீதி தினசரி காய்கறி மார்க்கெட்டுக்கு நேற்று காலை வாடிக்கையாளர்கள் வருகை சரிந்தது. இதன் காரணமாக விற்பனை குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். சேலத்தில் சின்ன, பெரிய கடைவீதி, திருமணிமுத்தாற்று, முதல் அக்ரஹாரம், தேர்நிலையம், பால்மார்க்கெட், வ.உ.சி., பூ மார்கெட், மாநகராட்சி வணிக வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினசரி பல நூறு டன் காய்கறிகள் விற்பனை நடக்கிறது. நாள் ஒன்றுக்கு பல கோடி மதிப்பில் காய்கறிகள் விற்பனையாகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட பல கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

சேலத்தை பொருத்தமட்டில் நேற்று மதியத்தில் இருந்து சாரல் மழை பெய்து வருகிறது. இம்மழையால் மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் பகல், இரவு நேரங்களில் வீடுகளில் கடும் குளிர் நிலவுகிறது. இந்த நிலையில் நேற்று காலை சேலத்தில் சாரல் மழை பெய்தது. கடை வீதி உள்பட பல பகுதிகளில் காய்கறி வியாபாரிகள் வழக்கம்போல் கடையை விரித்து காய்கறிகளை விற்பனைக்கு வைத்திருந்தனர். கடும் குளிர், சாரல் மழை காரணமாக நேற்று சேலம் சின்ன, பெரிய கடைவீதி, முதல் அக்ரஹாரம், திருமணிமுத்தாற்று ஓரமுள்ள காய்கறிக்கடைகளுக்கு வாடிக்கையாளர்களின் வருகை குறைந்து காணப்பட்டது. இதனால் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 50 சதவீதம் காய்கறிகள் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்தது. விற்பனை குறைந்ததால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post தினசரி காய்கறி மார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் வருகை சரிவு appeared first on Dinakaran.

Read Entire Article