
புதுடெல்லி,
டெல்லி சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில், பெரும்பான்மைக்கு கூடுதலாக 48 இடங்களை கைப்பற்றிய பா.ஜ.க. சமீபத்தில் ஆட்சியமைத்தது. ஷாலிமர் பாக் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற, அக்கட்சியை சேர்ந்த ரேகா குப்தா (வயது 50) முதல்-மந்திரியாக பொறுப்பேற்று கொண்டார். முதல்முறை எம்.எல்.ஏ.வான அவர் டெல்லி முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டது பலராலும் ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ஆம் ஆத்மியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரியான அதிஷி, தன்னுடைய கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் சென்று நாளை ரேகாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளார்.
இதுபற்றி அதிஷி கூறும்போது, பிரதமர் மோடி கடந்த ஜனவரி 31-ந்தேதி துவாரகாவில் நடந்த தேர்தல் பேரணியில் பேசும்போது, டெல்லியின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,500 பணம் வழங்கும் திட்டம், பா.ஜ.க. அரசு அமைந்த பின்னர் நடைபெறும் முதல் மந்திரி சபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என கூறினார்.
ஆனால், கடந்த 20-ந்தேதி முதல் மந்திரி சபை கூட்டம் நடந்தது. இதில், இந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. மோடியின் உத்தரவாதம் மீது நம்பிக்கை வைத்த டெல்லி பெண்கள் துரோகம் இழைக்கப்பட்டு விட்டது என்பது போல் உணருகின்றனர் என அதிஷி கூறியுள்ளார்.
முதல்-மந்திரி ரேகா குப்தா உள்பட கட்சி தலைவர்கள் பலரும், மார்ச்சில் இந்த திட்டம் அமலுக்கு வரும் என உறுதி கூறினார்கள். இந்நிலையில், இதுபற்றி ரேகா குப்தாவுக்கு, அதிஷி இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பிரதமர் மோடி உத்தரவாதம் அளித்த இந்த திட்டத்திற்கு பா.ஜ.க.வின் முதல் மந்திரி சபை கூட்டத்தில் ஏன் ஒப்புதல் அளிக்கப்படவில்லை? என கேட்டுள்ளார்.