ஜோஷ் இங்லிஸ் அபார சதம்: இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா அணி

6 hours ago 1

லாகூர்,

8 அணிகள் கலந்து கொண்டுள்ள சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து இங்கிலாந்தின் தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் களம் இறங்கினர். இதில் டக்கெட் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இதில் பில் சால்ட் 10 ரன்னிலும், ஜேமி ஸ்மித் 15 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ஜோ ரூட் களம் இறங்கினார். டக்கெட் - ஜோ ரூட் ஜோடி நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. சீரான ரன்கள் சேர்த்த இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

இதில் ஜோ ரூட் அரைசதம் அடித்த நிலையில் 68 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து களம் புகுந்த ஹாரி புரூக் 3 ரன், பட்லர் 23 ரன், லிவிங்ஸ்டன் 14 ரன் எடுத்து வெளியேறினர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய டக்கெட் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்ட அவர் 143 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகளுடன் 165 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பென் டக்கெட் 165 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக பென் துவார்ஷியஸ் 3 விக்கெட்டுகளும், ஆடம் ஜம்பா மற்றும் லபுஸ்சேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணியின் சார்பில் மேத்தேவ் ஷாட் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் ஹெட் 6 ரன்னில் வெளியேற, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஸ்டீவன் சுமித் 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக மேத்தேவ் ஷாட்டுடன் லபுஸ்சேன் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில் லபுஸ்சேன் 47 ரன்களில் கேட்ச் ஆனார். அவரைத்தொடர்ந்து தனது அரை சதத்தை பதிவு செய்திருந்த மேத்தேவ் ஷாட்டும் 63 ரன்களில் வெளியேறினார்.

இதனைத்தொடர்ந்து ஜோஷ் இங்லிஸ் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். சீரான ரன் குவிப்பில் ஈடுபட்ட இருவரும், தங்கள் அரை சதத்தை பதிவு செய்தனர். இந்த சூழலில் அலெக்ஸ் கேரி 69 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஜோஸ் இங்கிலிசுடன், மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். இதனிடையே அதிரடியாக ரன்கள் குவிக்க தொடங்கிய ஜோஸ் இங்கிஸ் தனது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

தொடர்ந்து அதிரடி காட்டிய ஜோஸ் இங்கிஸ் 120 (86) ரன்களும், மேக்ஸ்வெல் 32 (15) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் ஆஸ்திரேலியா அணி 47.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணியின் சார்பில் மார்க் வுட், ஜோப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ், அடில் ரஷித், லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது.

Read Entire Article