சென்னை: பெண்களுக்கு பாதுகாப்பு கேட்டு போராடினால் கைது செய்வதா? அண்ணா பல்கலை. சிக்கலில் திமுக அரசை குற்ற உணர்வு உறுத்துகிறதா? என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும்; தமிழகத்தில் அனைத்துப் பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி உள்ளிட்ட பாட்டாளி மகளிர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்களை பாதுகாக்க முடியாத திமுக அரசின் இந்த சர்வாதிகார நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.