திருத்தணி: திருத்தணியில் கடந்த ஒரு வாரத்தில் தொடர்ந்து 2வது முறையாக டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு மர்ம ஆசாமிகள் பணம், மது பாட்டில்களை திருடிச் சென்றுள்ளனர். இதில் லாக்கரை உடைக்க முடியாததால் விற்பனை பணம் ரூ.6 லட்சம் தப்பியது.திருத்தணி அருகே மத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த வாரம் பக்கவாட்டு சுவரில் துளை போட்ட மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து பீர் குடித்துவிட்டு, காலி பாட்டில்களை வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு மது கடைகளுக்கு விடுமுறை என்பதால், திருத்தணி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில், திருத்தணியில் உள்ள அரக்கோணம் சாலையில் பிஎஸ்ஆர் நகரில் ஏரிக்கரை பகுதியில் ஒரே இடத்தில் 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒரு கடையில் பக்கவாட்டு சுவரில் துளை போடப்பட்டிருப்பதை பார்த்த ரோந்து போலீசார் உடனடியாக டிஎஸ்பி கந்தனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்ததையடுத்து, கடையின் மேற்பார்வையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கடையின் மேற்பார்வையாளர் கிரி மற்றும் விற்பனையாளர்கள் அங்கு வந்தனர்.
இதனையடுத்து கடையின் ஷட்டரை திறந்து பார்த்தபோது கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரம் ரூபாய் மற்றும் மதுபான பாட்டில்கள் திருடப்பட்டது தெரியவந்தது. கடையில் நேற்று விற்பனை பணமான ரூ.6 லட்சம் கடையின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்ததால் அதனை உடைக்க முடியாமல் மர்ம நபர்கள், கல்லாவில் இருந்த பணம் மற்றும் பாட்டில்களை திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது. இதற்காக மோப்பநாய் அங்கு வர வழைக்கப்பட்டது.
அந்த மோப்பநாய் பைபாஸ் சாலை, சித்தூர் வரை ஓடிச்சென்று நின்று விட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்கள் சேகரித்தனர். திருத்தணி பகுதியில் ஒரு வார இடைவெளியில் அடுத்தடுத்து 2 டாஸ்மாக் கடைகளில் மர்ம கும்பல் சுவரில் ஒரே மாதிரி துளையிட்டு கடைக்குள் புகுந்து பணம் மற்றும் மதுபானம் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருத்தணியில் தொடர்ந்து 2வது சம்பவம் டாஸ்மாக் கடை சுவரில் துளைபோட்டு பணம், மது பாட்டில்கள் திருட்டு: லாக்கரில் இருந்த ரூ.6 லட்சம் தப்பியது appeared first on Dinakaran.