பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான் என்றும், அதிகமாக பெண்கள் வேலைக்கு செல்லும் மாநிலமும் தமிழகம் தான் என்று பாஜக எம்எல்ஏ பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசினார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று நடைபெற்ற கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு மொடக்குறிச்சி தொகுதி உறுப்பினர் சி.சரஸ்வதி (பாஜக) பேசியதாவது: அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் அலுவல் பணிக்கும் பயன்படுத்தப்படுகிறார்கள். இதனால், அவர்களுக்கு பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. எனவே, அதற்காக தனியாக அலுவலர்களை நியமிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் படிப்புடன் தொழில் கல்வியையும் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று உள்ளது. எனவே, இந்த அரசு அரசியல் பார்க்காமல் புதிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: உறுப்பினர் இங்கே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார். வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்கிறார். பாஜக ஆளுகிற மாநிலங்களை விட இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு தான். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பெண்கள் அதிகம் பேர் வேலைக்கு செல்கிறார்கள். அவர்களுக்காக அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பெண்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்கபப்ட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய இன்று கூட 2 சட்ட மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
The post பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு பெண்கள் அதிகமாக வேலைக்கு செல்லும் மாநிலமும் தமிழகம் தான்: பாஜக எம்எல்ஏ பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் appeared first on Dinakaran.