
பக்தர்களை கவசம் போன்று பாதுகாப்பதற்காக தேவராய சுவாமிகளால் பாடப்பட்டது கந்த சஷ்டி கவசம். சஷ்டி விரதம் இருப்பவர்கள் ஆறு நாளும் இந்த கவசத்தை படிப்பது வழக்கம். கந்த சஷ்டி கவசத்தைப் படித்தால் கிடைக்கும் நன்மையைப் பற்றி தேவராய சுவாமிகளே குறிப்பிட்டுள்ளார். கவசத்தின் முதல் பாடலில் துதிப்போருக்கு வல்வினை போம், துன்பம் போம், நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும், நிஷ்டையும் கைகூடும் என்கிறார்.
அதாவது கந்த சஷ்டி கவசம் படிப்பவர்களுக்கு தீவினையும், துன்பமும் நீங்குவதோடு செல்வ வளம் பெருகும். காலை, மாலையில் பக்தியுடன் படித்து, திருநீற்றினை நெற்றியில் அணிவோருக்கு நவக்கிரகங்களால் நன்மை உண்மை உண்டாகும். மன்மதன் போல பேரழகும், வாழ்வில் பெற வேண்டிய பதினாறு பேறுகளும் கிடைக்கும்.
சஷ்டி விரத காலம் மட்டுமின்றி, தினமும் இதைப் படிப்போருக்கு சிறந்த பாதுகாப்பு கிடைக்கும், குறிப்பாக, பெண்களுக்கு சஷ்டி கவசம் சிறந்த பாதுகாப்பைத் தரும். மேலும் குழந்தை இல்லாத பெண்கள் முருகன் கோவில்களில் தங்கி, விரதம் மேற்கொண்டால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.