
ஜெய்ப்பூர்,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்தது. அதிகபட்சமானா நேஹல் வதேரா 70 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 220 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் - வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர். இதில் அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரை அதிரடியாக எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் 4 பவுண்டரி ஒரு சிக்சர் என 22 ரன்கள் அடித்து அசத்தினார்.
அவருடன் வைபவ் சூர்யவன்ஷியும் வெளுத்து வாங்க ராஜஸ்தான் அணியின் ரன் வேகம் ராக்கெட் வேகத்தில் எகிறியது. வெறும் 2.5 ஓவர்களில் ராஜஸ்தான் 50 ரன்களை கடந்தது. இவர்களின் அதிரடியால் ராஜஸ்தான் எளிதில் வெற்றி பெறும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் ஆட்டம் பஞ்சாப் பக்கம் திரும்பியது. முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 4.5 ஓவர்களில் 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் சூர்யவன்ஷி 40 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த 40 ரன்களையும் வெறும் பவுண்டரி மற்றும் சிக்சர்களில் (4 பவுண்டரி & 4 சிக்சர்) மட்டுமே அடித்தார்.
அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 20 ரன்களிலும், ரியான் பராக் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடி வந்த ஜெய்ஸ்வால் 50 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் துருவ் ஜூரெல் தனி ஆளாக போராட அவருக்கு மறுமுனையில் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷிம்ரான் ஹெட்மயர் 12 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார்.
ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது. மார்கோ ஜான்சன் வீசிய அந்த ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணியால் 11 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. துருவ் ஜூரெல் (53 ரன்கள்) போராடியும் பலன் கிடைக்கவில்லை.
முடிவில் 20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய ராஜஸ்தான் அணியால் 7 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் பஞ்சாப் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ஹர்ப்ரீத் பிரார் 3 விக்கெட்டுகளும், மார்கோ ஜான்சன் மற்றும் ஓமர்சாய் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.