பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க தனிச் சிறப்பு நீதிமன்றம்: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

3 weeks ago 5

சென்னை: சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை, திருச்சி உள்ளிட்ட 7 இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க தனிச் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புற பகுதிகளில் ஏழு தனிச் சிறப்பு நீதிமன்றங்கள் புதிதாக அமைக்கப்படும். இத்தகைய குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க, மாவட்டந்தோறும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில சிறப்புக் குழு அமைக்கப்படும். பாலியல் குற்றங்களில் தண்டனை பெற்று, சிறையில் இருக்கின்ற கைதிகளுக்கு, முன்விடுதலை கிடைக்காத வகையில தமிழ்நாடு சிறைத் துறை விதிகள் திருத்தம் செய்யப்படும். இரண்டாவது அறிவிப்பு. சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளில் புதிய சாலைகளை அமைத்திடவும், பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைத்து புதுப்பித்திடவும், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைகளால் சேதப்பட்டுள்ள சாலைகளை சீரமைத்திடவும் வரும் ஆண்டுகளில் 3 ஆயிரத்து 750 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புற சாலை பணிகள் மேற்கொள்ளப்படும். மூன்றாவது அறிவிப்பு. வரும் ஆண்டில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு விரைந்து கொண்டு வரப்படும்.

நான்காவது அறிவிப்பு. இந்த அரசு பதவி ஏற்றபின் ஏழை எளிய பட்டியலின மக்களுக்கு 2 லட்சத்து 67 ஆயிரத்து 437 மனைகளை வரன்முறைப்படுத்தி இ-பட்டா வழங்கப்பட்டிருக்கின்றன. அடுத்த இரண்டு ஆண்டுகளில், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும்விதமாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சீர்செய்தும் புதியதாக நிலங்களை கையகப்படுத்தியும் ஒரு இலட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் அவர்களுக்கு வழங்கப்படும். ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ தமிழ்நாட்டை மேம்படுத்தும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாக இருப்பவன். இதைத்தவிர எனக்கு வேறு பணிகள் இல்லை. நான் பிறந்தப்போது ஸ்டாலின் என்று பெயர் சூட்டின தலைவர் கலைஞர், வளர்ந்தப்போது ‘உழைப்பு’னுதான் பெயர் சூட்டினார். அப்படி உழைக்கக் கத்துக் கொடுத்தவரும் அவர்தான். ‘‘ஓய்வெடுத்து உழையுங்கள்” என்று ஆலோசனை சொல்கிறவர்களிடம், ‘ஓய்வுக்கே ஓய்வு கொடுத்தவரின் மகன் நான்’ என்று சொல்லுவேன். ‘‘தலைவர் பாதையே தனிப் பாதை, கலைஞர் பாதையே வெற்றிப் பாதை” என்று செயல்பட்டு வருகின்றவன் நான். பெரியார், அண்ணா ஆகிய இருபெரும் தலைவர்கள் உருவாக்கி கொடுத்த கொள்கைகளை தலைவர் கலைஞர் வழிநின்று காப்பேன்.

நவீனத் தமிழ்நாட்டை இந்தியாவில் முதன்மை மாநிலமாக, முன்னோடி மாநிலமாக உயர்த்திக் காட்டுவேன். மக்களாட்சிக் காலத்தில் திராவிட மாடல் ஆட்சிதான் பொற்கால ஆட்சி என்று வரலாறு பதிவு செய்யும். இந்தப் பொற்கால ஆட்சியே காலம் காலமாக தொடரும்! தொடரும்! தொடரும். கடந்த 3 நாட்களில் மொத்தம் 25 உறுப்பினர்கள் பேசியிருக்கிறார்கள். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது 10 உறுப்பினர்கள் 112 திருத்தங்களை வழங்கியிருக்கிறார்கள். இந்த அரசுக்கு உதவுகிறவகையில் பல்வேறு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும், விமர்சனங்களையும் தெரிவித்திருக்கிறார்கள். தங்களுடைய தொகுதிக்கான கோரிக்கைகளையும் முன்வைத்திருக்கிறார்கள். அவை உரிய அனைத்தும் அமைச்சர்களுக்கு நடவடிக்கை எடுப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. உங்களுடைய ஆலோசனைகளை கருத்தில் கொண்டு, அதில் நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு உறுதியாக நிறைவேற்றித் தரும். இவ்வாறு அவர் பேசினார்.

 

The post பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க தனிச் சிறப்பு நீதிமன்றம்: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article