இந்தியா மட்டுமல்ல உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ளவர்கள் என்னிடம் ஆன்லைன் மூலமாக ஆர்வமுடன் யோகா கற்றுக்கொள்கிறார்கள் என பெருமிதமாக சொல்கிறார் சென்னை சிறுசேரியில் வசிக்கும் யோகா ஆசிரியர் மதுரா. யோகாவினை முறையாக படித்து பட்டங்கள் பெற்று, தனது பதினைந்து வருட அனுபவத்தில் பலருக்கும் யோகா கற்று கொடுக்கிறார் மதுரா ராஜகோபாலன். நிறைய கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள், குடும்ப தலைவிகள், கல்லூரி மாணவிகள், தொண்டு அமைப்புகள் என பலரும் தான் கற்ற யோகக்கலையை தனது யோகி மதுராவின் மூலமாக கற்று தந்து வருகிறார். ‘‘யோகா என்பது உடலும் மனமும் இணைவது தான்” என்னும் மதுரா பெண்களுக்கான ஸ்பெஷல் யோகா பயிற்சி குறித்து புதிய வடிவமைப்புகளை செய்து வருகிறார். யோகா பெண்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே மிக முக்கியமான ஒன்று தான் அது குறித்து நிறைய விழிப்புணர்வை பலருக்கும் ஏற்படுத்த வேண்டும் என்கிற மதுரா யோகக்கலை குறித்தும் அதனை தொடர்ந்து செய்வதால் ஏற்படும் உடல் மன ஆரோக்கியங்கள் குறித்தும் நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.
யோகாவில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி எப்போது?
எனக்கு பிரசவ காலத்தில் ஏற்பட்ட சிக்கலுக்காகவும், அதே போன்று பணிக்காலத்தில் ஏற்பட்ட முதுகுவலி பிரச்னைக்காகவும் தான் யோகாவினை முதலில் கற்றுக்கொள்ள விரும்பினேன். அதே காலகட்டத்தில் எனது தந்தை இதய நோயில் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் அவரது சிகிச்சைக்கு பிறகு யோகாவினை கற்றுக்கொண்டு தொடர்ந்து செய்து வந்தார். அப்போது அவரிடம் ஏற்பட்ட சிறப்பான மாற்றங்களே என்னை தேடித்தேடி ஆர்வமுடன் யோகா கற்க தூண்டியது. அந்த வகையில் எனது தந்தை தான் எனது முதல் இன்ஸ்பிரேஷன். அதன் பிறகு தற்போது வரை யோகா எனது வாழ்வினில் பெரும் அங்கமாகவே மாறி விட்டது. தற்போது பெண்களுக்காகவே நிறைய யோகா பயிற்சிகளை வடிவமைத்து வருகிறேன். அதிலும் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், குழந்தை பாக்கியம் பெற விரும்புபவர்கள் மற்றும் மெனோபாஸ் காலகட்டத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான பயிற்சி முறைகளை வடிவமைக்க தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறேன். விரைவில் அதற்கான முழு டிசைனை உருவாக்கி பலருக்கும் கற்றுத்தர நினைக்கிறேன்.
யோகாவினை எப்போது முறையாக கற்றுக் கொண்டீர்கள்? அதனையே முழுநேர பணியாக செய்ய
நினைத்தீர்கள்?
எனது சொந்த ஊர் டெல்லி. எனது எம்பிஏ படிப்பு மற்றும் தனியார் நிறுவன வேலை என துவக்கத்தில் டெல்லியில் தான் இருந்து வந்தேன். முதன் முதலில் ஆர்ட் ஆப் லிவிங் மையத்தில் தான் யோகா கற்றுக்கொள்ள துவங்கினேன். அதன் பிறகு 2014 ஆம் ஆண்டில் சென்னைக்கு மாற்றலாகி வந்தேன். அப்போது கிருஷ்ணமாச்சாரி யோகா நிலையத்தில் இரண்டு ஆண்டுகள் யோகா ஆசிரியர் படிப்பினை படித்தேன். அதன் பிறகு பெங்களூர் விவேகானந்தாவில் யோகா ஆசிரியர் பயிற்சிகளை படித்தேன். பின்னர் நாசிக்கில் பெண்களுக்கான ஸ்பெஷல் பயற்சி குறித்தும், ப்ரக்னென்ஸி யோகா பற்றிய விஷயங்களையும் படித்தேன். நான் படிக்கும் போதே நிறைய நேரடியான யோகா வகுப்புக்களை நடத்தி வந்தேன். 2020 ஆம் ஆண்டில் கோவிட் காலகட்டத்தில் தான் பல குருமார்களை பார்த்து நானும் ஆன்லைன் வகுப்புகளை எடுக்க துவங்கினேன். தற்போது இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் என்னிடம் முறையான யோகாவினை கற்றுக்கொள்ள நிறைய பேர் வருகிறார்கள். இது வரை 2500 க்கும் மேற்பட்டவர்களுக்கு யோகாவினை கற்றுக்கொடுத்த அனுபவங்கள் எனக்கு இருக்கிறது. எனது முப்பத்தி ஐந்து வயதில் துவங்கிய யோகா பயணம் கடந்த பதினைந்து வருடங்களாக வெற்றிகரமாக யோகி மதுரா மூலமாக சிறப்பான பயணமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கர்ப்பமாக இருப்பவர்கள் யோகா செய்யலாமா?
குழந்தை பாக்கியம் பெற நினைப்பவர்கள் முதலிலேயே யோகாவை செய்து வரலாம். இது குழந்தை பாக்கியம் பெறுவதை மிக எளிதாக்கி விடும். கர்ப்பமான பிறகு முதல் மூன்று மாதம் தியானம் பிராணாயாமம் போன்றவற்றை மட்டும் செய்யலாம். அதன் பிறகு அதற்கென்றேயான சில ஆசனங்களை மட்டும் செய்யலாம். இதற்கு முறையான யோகா ஆசிரியரிடம் கற்றுக்கொண்டு செய்வதே மிக சிறந்தது. இந்த ஆசனங்கள் கர்ப்பிணி பெண்களுக்கு நல்ல உடல் நலத்தை வழங்கும். இது பெரும்பாலும் சுகப்பிரசவம் நிகழவும் உதவிகரமாக இருக்கும். அதே போன்று பிரவத்திற்கு பிறகான போஸ்ட் டிப்ரஷன், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் உடல் எடை மாற்றங்கள் போன்றவற்றை கட்டுக்குள் வைக்கும். குழந்தை வயிற்றிலிருக்கும் போதே செய்யும் யோகாவினால் நல்ல ஆரோக்கியமான மனநிலை மற்றும் உடல் வளர்ச்சியினை குழந்தைகள் பெறும். இது போல் யோகா மூலம் இன்னும்
ஏராளமான பலன்கள் இருக்கிறது.
பெண்களுக்கு யோகா எவ்வளவு அவசியம்?
பொதுவாகவே ஆண்களை விட பெண்கள் அதிக ஆர்வமாக யோகாவினை கற்றுக்கொள்ள வருகிறார்கள். பெண்களை ஒப்பீடு செய்யும் ஆண்கள் கொஞ்சம் குறைவாகவே ஆர்வம் காட்டுகிறார்கள். பெண்கள் உடல் எடையை பராமரிக்க மற்றும் மென்ஸூரல் பிரச்னைகள், மெனோபாஸ் பிரச்னைகள், கர்ப்பப்பை நீர் கட்டிகள் போன்ற பல்வேறு உபாதைகள் காரணமாக யோகாவினை கற்றுக்கொள்ள நினைக்கிறார்கள். மேலும் நாற்பது வயதிற்கு மேல் முட்டி வலி முதுகுவலி போன்ற பிரச்னைகளால் யோகாவினை கற்க ஆர்வம் காட்டுகிறார்கள். முறையான வகையில் யோகாசனங்களை தொடர்ந்து செய்வதன் மூலமாக பெரும் பலன்கள் கிடைக்கிறது என்பதையும் உணர்கிறார்கள். பெண்களின் கடினமான காலகட்டமான மெனோபாஸ் கட்டத்தில் ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகள் யோகாவின் மூலமாக பெரும்பாலும் கட்டுக்குள் வருகிறது. உடல் ஆரோக்கியத்தோடு மன தளர்ச்சி மனச்சோர்வு மற்றும் மன சிதைவு போன்ற பிரச்னைகளுக்கு யோகாசனம் மூலமாக நல்லதொரு தீர்வுகள் கிடைக்கிறது. முக்கியமாக ஹார்மோன் பிரச்னைகள் கட்டுக்குள் வருகிறது. போஸ்ட் மெனோபாஸ் பிரச்னைகளுக்கு கூட யோகாவில் சிறந்த தீர்வுகள் உண்டு. இது குறித்த நிறைய ஆய்வினையும் மேற்கொண்டு வருகிறேன்.
யோகா கற்றுக்கொள்ள யாரெல்லாம் வருகிறார்கள்?
பொதுவாக யோகா கற்றுக்கொள்ள வருபவர்கள் மூன்று விதமான சிந்தனை உடையவர்களாக இருப்பார்கள். முதல் வகையினர் முதுகுவலி , முழங்கால் வலி, மூட்டுவலி, சுகர், பிரஷர் போன்ற உடல் சார்ந்த பல்வேறு உபாதைகளை கட்டுக்குள் வைக்க யோகா கற்றுக்கொள்ள வருவார்கள். மற்றும் சிலர் உடல் பிட்னஸ் ஆரோக்கியம் போன்றவற்றை சமநிலையில் வைக்க ஆரம்பத்திலிருந்தே யோகா கற்றுக்கொள்ள வருவார்கள். வெகு சிலர் ஆன்மிகம் மற்றும் மன அமைதிக்காக யோகாவினை கற்றுக்கொள்ள வருகிறார்கள். எந்த நோக்கத்திற்காக யோகா கற்றுக் கொண்டாலும் அதன் முழு பலனை சிறப்பான வகையில் உணரமுடியும். யோகாவினால் நமக்கு ஏற்படும் பல்வேறு உடல் மற்றும் மனத்திற்கு ஏற்படும் நன்மைகளை முழுவதுமாக உணர்ந்துக்கொண்டால் அதனை தொடர்ந்து செய்து வருவார்கள் பலரும். யோகா குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்படவேண்டும். நோய் வராமல் காக்கவும் அப்படி வந்துவிட்டால் அதனை கட்டுக்குள் வைக்கவும் யோகா பெரிதும் உதவுகிறது என்றால் அது மிகையில்லை. நவீன பாஸ்ட்புட் உலகில் ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தத்திற்கு யோகாவே மிக சிறந்த தீர்வு என்கிறார் யோகா ஆசிரியர் மதுரா
ராஜகோபாலன்.
– தனுஜா ஜெயராமன்
The post பெண்களுக்கான பிரத்யேக யோகாவை வடிவமைத்து வருகிறேன் : யோகா ஆசிரியர் மதுரா ராஜகோபாலன்! appeared first on Dinakaran.