பெண் மந்திரியை அவதூறாக பேசிய வழக்கு - சி.டி.ரவிக்கு இடைக்கால ஜாமீன்

6 months ago 21

பெங்களூரு,

அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறிய கருத்துகளுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், கர்நாடக சட்டசபையிலும் இது தொடர்பாக விவாதம் நடந்தது. அப்போது, பா.ஜ.க. மாநில தலைவரும், மேலவை உறுப்பினருமான சி.டி.ரவி, ராகுல்காந்தியை விமர்சித்து பேசினார்.

இதற்கு மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி லட்சுமி ஹெபால்கர் பதிலடி கொடுத்தார். அப்போது, பெண் மந்திரியை நோக்கி சி.டி.ரவி, அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து லட்சுமி ஹெபால்கர், அவைத்தலைவரிடம் புகார் அளித்தார். மேலும், இவ்விவகாரம் குறித்து போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் அடிப்படையில் சி.டி.ரவி மீது புதிய சட்டப்பிரிவு 75 மற்றும் 79 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சி.டி.ரவியை போலீசார் கைது செய்ய முற்பட்டனர். அதற்கு சி.டி.ரவி மறுப்பு தெரிவித்ததால், சட்டசபை வளாகத்தில் வைத்தே குண்டுக்கட்டாக அவரை போலீசார் கைது செய்தனர். இதனால் சட்டசபை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து தனக்கு ஜாமீன் வழங்ககோரி கர்நாடக ஐகோர்ட்டில் சி.டி.ரவி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, மனுதாரர் சி.டி.ரவி தற்போது எம்.எல்.சி.யாக பதவி வகித்து வரும் நிலையில், காவல்துறை அவரை பலவந்தமாக கைது செய்ததை ஏற்க முடியாது என்று தெரிவித்து, சி.டி.ரவிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Read Entire Article