திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

4 hours ago 1

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் ஒன்றாகும். இங்கு நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். மேலும், இங்கு சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் இருந்து, தோன்றிய அகோர மூர்த்தி மனித உருவில் அருள்பாலிக்கிறார். சிவனை மனித உருவில் பார்க்கும் ஒரே தலமாக இக்கோவில் விளங்குகிறது.

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.

கும்பாபிஷேகத்திற்காக கடந்த 3-ந் தேதி பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. பின்னர், கோவில் வளாகத்தில் 109 குண்டங்களுடன் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த யாகசாலை மண்டபத்தில் யாகசாலை பூஜை தொடங்கி நடைபெற்றது. சோமசுந்தர சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற யாகசாலை பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். யாகசாலை பூஜைகள் இன்று காலை 8-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று, பூர்ணாஹூதி முடிவடைந்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர், யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்கள் மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்து காலை 5.30 மணிக்கு கோவிலில் உள்ள அனைத்து பரிவார சன்னதி விமான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து, காலை 9 மணிக்கு ராஜகோபுரம் உள்ளிட்ட 4 கோபுரங்கள் சுவேதராண்யேஸ்வரர் சுவாமி, பிரம்ம வித்யாம்பிகை அம்பாள், புதன் பகவான், அகோர மூர்த்தி உள்ளிட்ட சுவாமி சன்னதி விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது.

கும்பாபிஷேக நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு 'ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய...' என்று பக்தி கோஷம் முழங்க தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்டது. 

Read Entire Article