பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக 'வாட்ஸ் அப்' குழு - ரெயில்வே போலீசார் திட்டம்

2 hours ago 2

சென்னை,

பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையில் ஒருபகுதியாக, வழக்கமாக ரெயில்களில் பயணிக்கும் பெண் பயணிகள் கொண்ட ஒரு 'வாட்ஸ் அப்' குழுவை உருவாக்க தமிழக ரெயில்வே போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில் பெட்டிகளில் பெண் பயணிகளின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகிறது. சமீபத்தில் கோவையில் இருந்து திருப்பதி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண்கள் பெட்டியில் கர்ப்பிணி பெண் ஒருவர் பயணித்தார். அந்த பெட்டியில் ஏறிய வாலிபர் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து அவரை ரெயிலில் இருந்து கீழே தள்ளினார். இதில் அந்த கர்ப்பிணி பெண் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதேபோல, பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் பெண் போலீசிடம் செயின் பறித்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இரவு 10 மணிக்கு பின்னர் புறப்படும் ரெயில்களில் ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் (ஆர்.பி.எப்.) இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, மின்சார ரெயிலில் பயணிக்கும் பெண் பயணிகள், சிறு தொழிலில் ஈடுபடும் திண்பண்ட வியாபாரிகள், வேலை நிமித்தமாக தினமும் பயணிக்கும் பெண்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து பகுதி வாரியாக புதிய வாட்ஸ் அப் குழுவை தொடக்க ரெயில்வே போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பெண் பயணிகளுக்கு ஏற்படும் தொந்தரவு, செல்போன் மற்றும் செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிய வாட்ஸ் அப் குழு பயன்படும் என ரெயில்வே போலீசார் தரப்பில் நம்பிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக, வழக்கமாக ரெயில்களில் பயணிக்கும் பெண் பயணிகள் கொண்ட ஒரு வாட்ஸ் அப் குழுவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரெயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

Read Entire Article