காடையாம்பட்டி, ஜூன் 24: காடையாம்பட்டி அருகே, பூசாரிப்பட்டி ஊராட்சி தாசசமுத்திரம் காலனியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதியில், தனியாருக்கு சொந்தமான நிலத்தில், பெட்ரோல் பங்க் அமைக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் சக்தி மாரியம்மன் கோயில், மதுரை வீரன் குலதெய்வ கோயில் உள்ளதால், ஆண்டுதோறும் தெவத்திருவிழா நடத்தும் போது, வாணவேடிக்கை மற்றும் மதுரை வீரன் பந்தக்காட்சி நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் பெட்ரோல் பங்க் அமைந்தால், தங்களது கலாச்சார நிகழ்வு தடைபடும்.
மேலும், இந்த நிலத்தின் அடியில் கெயில் நிறுவனம் ராட்சத எரிவாயு குழாய் செல்கிறது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட தனியார் நில உரிமையாளரிடம் முறையிட்டபோது, கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். அதன் பேரில், மாவட்ட வருவாய் ஆய்வாளர் ரவிக்குமார், சம்மந்தப்பட்ட இடத்தை நேற்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அவரிடம் ஊர்பொதுமக்கள் பெட்ரோல் பங்க் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பெட்ரோல் பங்க் அமைக்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
The post பெட்ரோல் பங்க் அமைக்க ஒரு தரப்பினர் எதிர்ப்பு appeared first on Dinakaran.