
கடலூர்,
பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்று பெட்ரோல் முழுவதும் நிரம்பிய நிலையில் தர்மபுரியில் இருந்து குமராட்சி நோக்கி நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை நல்லூர் நகரை சேர்ந்த ராமச்சந்திரன் (62), என்பவர் ஓட்டி சென்று கொண்டிருந்தார். இதேபோல சேலத்தை சேர்ந்த நாச்சிமுத்து (62), என்பவர் கடலூரில் இருந்து சேலம் நோக்கி அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.
லாரிகளும் விருத்தாசலம் அருகே உள்ள தொரவலூர் கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அரிசி ஏற்றிச் சென்ற லாரியின் டிரைவரான நாச்சிமுத்து தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசி லாரி திடீரென எதிரே வந்த பெட்ரோல் டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் 2 லாரிகளின் முன்பக்கமும் பலத்த சேதமடைந்தது. இதில் அரிசி ஏற்றிச் சென்ற டிரைவர் நாச்சிமுத்து சம்பவ இடத்திலேயே பலியானார். டேங்கர் லாரியும் பலத்த சேதம் அடைந்திருந்ததால் பெட்ரோல் சாலையில் ஊற்றியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்து விரைந்து சென்ற விருத்தாசலம் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சங்கர் தலைமையிலான வீரர்கள் பெட்ரோல் டேங்கர் லாரி மீது தண்ணீரை பீய்ச்சி அடித்ததுடன், பெட்ரோல் ஒழுகுவதையும் அடைத்து .
ஏதும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்தனர். தொடர்ந்து அங்கு வந்த விருத்தாசலம் போலீசார் லாரியின் இடிப்பாடுகளில் சிக்கி கிடந்த டிரைவர் நாச்சிமுத்து உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பெட்ரோல் டேங்கர் லாரி டிரைவர் ராமச்சந்திரன் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினார்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.