
மதுரை மாவட்டம் சோழவந்தான் ரெயில் நிலையத்தில் பெட்ரோல் ஏற்றி வந்த சரக்கு ரெயிலில் திடீரென பெட்ரோல் கசிவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக தருமபுரியில் இருந்து ஒரு டேங்கரில் 70 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் வீதம் 34 டேங்குகளில் பெட்ரோல் ஏற்றி கொண்டு சரக்கு ரெயில் ஒன்று கப்பலூர் தொழிற்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் சோழவந்தான் ரெயில் நிலையம் அருகே வந்தபோது, டேங்கில் இருந்து பெட்ரோல் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சோழவந்தான் ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டது. உடனடியாக சோழவந்தான் தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும், ஓஎன்ஜிசி பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு பெட்ரோல் கசிவு சரி செய்யப்பட்டது. அதிகாரிகள் முன்கூட்டியே கசிவை கண்டறிந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
பின்னர் சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு சரக்கு ரெயில் கப்பலூர் தொழிற்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் ரெயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதாக ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.