பெஞ்சல் புயலில் உருக்குலைந்த பம்பை ஆறு: கரைகளை பலப்படுத்தி தூர்வாரிட கோரிக்கை

4 months ago 11

விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயலில் சேதமடைந்த பம்பை வாய்க்கால் கரைகளை பலப்படுத்த வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 26ம் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்தது. 30ம் தேதி புயல் கரையை கடந்தபோது வரலாறு காணாத மழை பெய்தது. மேலும் சாத்தனூர் அணையிலிருந்தும் 2 லட்சத்துக்கும் அதிகமான கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கிராமங்களில் வெள்ளம் புகுந்தன. சுமார் 1 லட்சம் ஹெக்டர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 5 ஆயிரம் குடியிருப்புகள் பகுதி, முழு அளவில் சேதமடைந்தது. மேலும் 173 ஏரிகள் உடைந்தன. சாலைகளும் சேதமடைந்தது. இதனிடையே முக்கிய நீர் வரத்து வாய்க்கால்களும் இந்த வெள்ளத்தின் பிடியிலிருந்து தப்பவில்லை. குறிப்பாக அதிக பாசன வசதியை தரக்கூடிய பம்பை வாய்க்கால் கரைகள் பல இடங்களில் சேதமடைந்துள்ளன. ஏரி, சாலைகளில் தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொண்டாலும் இந்த வெள்ளத்தில் அதிகளவு சேமமடைந்த பம்பை வாய்க்காலை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ெதன்பெண்ணை ஆற்றிலிருந்து பிரியும் பம்பை ஆறு கடந்த 1903ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அணைக்கட்டிலிருந்து பிரியும் இந்த பம்பை ஆறு விழுப்புரம் மாவட்டத்தில் 49 கி.மீ தூரம் பாய்ந்தோடி 26 ஏரிகளில் தண்ணீரை நிரப்பி செல்கிறது. இதன்மூலம் சுமார் 2,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இதன் அருகாமையில் உள்ள கிராமங்களுக்கும் நிலத்தடி நீர் உயர்ந்து போர்வெல் தண்ணீருக்கும், குடிநீருக்கும் பெரும் பங்காற்றி வருகின்றன. பல ஆண்டுகளாக இந்த பம்பை ஆறு தூர்வாராத நிலையில் இதில் உள்ள முட்செடிகள், புதர்களை அகற்றியும் தூர்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தன. இதனிடையே கடந்த அதிமுக ஆட்சியில் 2018ம் ஆண்டு பொதுப்பணித்துறை தூர்வாரும் பணியை மேற்கொண்டது. ஆனால் இந்த பணிகள் சரியாக மேற்கொள்ளாமல் பெயரளவில் மேற்கொண்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது கடைகோடிக்கு தண்ணீர் செல்லாமல் ஊருக்குள் வெள்ளம் புகும் நிலை ஏற்பட்டு வருகின்றன.

இதனிடையே தற்போது பெஞ்சல் புயலில் வரலாறு காணாத மழை பெய்து பம்பை ஆற்றிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் இந்த ஆற்றின் கரைகள் பல இடங்களில் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. திருவாமாத்தூர், அய்யூர் அகரம், குமளம், மல்லிகைபட்டு, காணை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளையொட்டி இந்த ஆற்றின் கரைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. பல ஆண்டுகளாக இந்த பம்பை ஆற்றின் கரைகளை பலப்படுத்தி தூர்வாரிட வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது பெஞ்சல் புயலில் மேலும் சேதமடைந்துள்ள நிலையில் இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது. விழுப்புரம் மாவட்டதில் பெஞ்சல் புயல் காரணமாக ரூ1,800 கோடி அளவில் சேதமடைந்துள்ளதாகவும், இதற்கான நிதி தேவை என்றும் மாவட்ட நிர்வாகம் ெதரிவித்துள்ளது. எனவே விழுப்புரம் மாவட்டத்துக்கு பெஞ்சல் புயல் நிதி ஒதுக்கிடும் போது அதில் பம்பை ஆற்றின் கரைகளை பலப்படுத்தி, தூர்வாரிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை வைத்துள்ளனர்.

அணைக்கட்டும் பலவீனமாக உள்ளது: திருக்கோவிலூர் அணைக்கட்டில் இருந்து பிரிந்து வரும் பம்பை ஆற்றில் அய்யங்கோவில்பட்டு, குமளம் ஆகிய 2 இடங்களில் அணைக்கட்டுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் சேகரிக்கப்படுகின்றன. இதில் இருந்து கிளை வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு ஏரிகளுக்கு நிரப்பப்படுகிறது. இந்நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக பம்பை ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த அய்யங்கோவில்பட்டு, குமளம் அணைக்கட்டும் சேதமடைந்து காணப்படுகின்றன. ஷட்டர்கள் உறுதித்தன்மையை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே பொதுப்பணித்துறையினர் அணைக்கட்டு பகுதிகளில் முழுமையாக ஆய்வு செய்து இதனை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. போர்க்கால அடிப்படையில் நிதி ஒதுக்கி சீரமைக்க வேண்டும்: இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முருகன் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக இந்த ஆண்டு ஏரி, முக்கிய வரத்து வாய்க்கால்கள், ஆறுகளை தூர்வாரும் பணியில் பொதுப்பணித்துறை சரியாக மேற்கொள்ளவில்லை.

கோடிவாய்க்கால்களை தூர்வாரியிருந்தாலே ஏரிகள் உடையாமல் வாய்க்கால், ஆறுகளில் தண்ணீர் சென்றிருக்கும். குறிப்பாக பம்பை ஆறு வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளப்ெபருக்கு அதிக கிராமம், விவசாய நிலங்கள் மண்மேடாக காட்சியளிக்கின்றன. தூர்வாரும் பணியை 2, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொண்டு கரைகளை சீரமைக்க வேண்டும். சாலை கடந்து செல்லும் பகுதிகளில் மட்டுமே இந்த பணிகளை மேற்கொள்கின்றனர். பொதுப்பணித்துறையின் வேலையே ஆறு, வரத்து வாய்க்கால்கள், ஏரி, குளங்களை தூர்வாரி பராமரிப்பதுதான். ஆனால் இந்த பணிகளை அதிகாரிகள் முறையாக மேற்கொள்ளவில்லை. எனவே போர்க்கால அடிப்படையில் பம்பை ஆற்றை சீரமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

The post பெஞ்சல் புயலில் உருக்குலைந்த பம்பை ஆறு: கரைகளை பலப்படுத்தி தூர்வாரிட கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article