சென்னை : பெஞ்சல் புயல் மற்றும் வெள்ளத்தினால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஏரிகள், அணைக்கட்டுகள் மற்றும் கால்வாய்களில் ஏற்பட்ட சேதம் மற்றும் புனரமைப்பு பணிகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:
பெஞ்சல் புயல் வெள்ளத்தால் சேதமடைந்த நீர்வளத்துறை கட்டுமானங்களின் தற்காலிக புனரமைப்பு பணிகளை விரைவில் செய்து முடிக்க வேண்டும். சேதம் அடைந்த கட்டுமானங்களின் புனரமைப்பிற்கு தேவையான நிதி ஒதுக்கீடு பெற மதிப்பீடுகளை தயாரித்து உடனடியாக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். தென்பெண்ணை ஆறு, மலட்டாறு, கோரையாறு, கெடிலம் ஆறு மற்றும் நந்தன் வாய்க்கால் சேதங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
குறிப்பாக, எல்லிஸ் அணைக்கட்டு, சொர்ணாவூர் அணைக்கட்டு, திருக்கோவிலூர் அணைக்கட்டு மற்றும் தளவானூர் அணைக்கட்டு சேதங்களையும் அவற்றின் புனரமைப்பு தொடர்பான விவரங்களும் கேட்டறியப்பட்டது. நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சென்னை மாநகர குடிநீர் ஆதாரங்களான பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் போன்ற ஏரிகளின் நீர் வரத்து, நீர் இருப்பு மற்றும் நீர் வெளியேற்றத்தை தொடர்ந்து கண்காணித்து பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன், முதன்மை தலைமைப் பொறியாளர் மன்மதன், சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் ஜானகி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post பெஞ்சல் புயலால் சேதமடைந்த கட்டுமான பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகன் உத்தரவு appeared first on Dinakaran.