ஸ்ரீ வில்லிப்புத்தூர் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் தேதி கோபுரத் தடிக்கு ஆண்டாள் நாச்சியார் எழுந்தருளுகிறார். இங்கே ‘கம்பன் குஞ்சலம்’ என்ற உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. சிற்றிலக்கியங்களில் சிகரமாக கருதப்படுபவை பாவைப் பாடல்கள். தமிழில் இரண்டு பாவை நூல்கள் உண்டு. ‘கோவை பாடிய வாயால் பாவை பாடுக’ என்று இறைவன் அருளிய வண்ணம் மாணிக்கவாசகரால் படைக்கப்பட்டது. ‘திருவெம்பாவை’ என்னும் நூலாகும். இது திருவண்ணாமலையில் அருளிச் செய்யப்பட்டது. இன்னொரு நூல் ‘திருப்பாவை’ சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் நாச்சியார் அருளிய சொல் மாலை இது. வேதச்சாரத்தைப் பிழிந்து எடுத்து முப்பது பாடல்களாலான அருமையான நூல்.
இந்த இரு நூல்களும் தித்திக்க தித்திக்க தமிழ்ப் பனுவல்கள். பக்திச்சுவை சொட்டச் சொட்ட பாடப்பட்ட இலக்கியங்கள். இந்த இரு நூல்களிலும் மார்கழி மாதத்தில் இளம் பெண்கள் நோற்கும் பாவை, நோன்பு குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் பாவை நோன்பு மிகவும் பழமையானது. சங்ககாலத் தொன்மை படைத்தது. மார்கழி நீராடல் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது. பாவைப் பாடல்கள், மார்கழி நோன்பு பற்றி விளக்குகின்றன. திருமணமாகாத பெண்கள், அதிகாலையில் துயில் எழுவர்.
எழுந்தவர்கள் மற்றப் பெண்களையும் தூக்கத்திலிருந்து எழுப்புவர். கூட்டமாகப் பாடிக்கொண்டே புண்ணியத் தீர்த்தங்களை நோக்கிச் செல்வர். அங்கே முறைப்படி நீராடிய பின், மண்ணாலாகிய பாவை ஒன்றில் கௌரிதேவியை எழுந்தருளச் செய்வர். அதனை அர்ச்சித்து வழிபடுவர். இப்படி முப்பது நாட்களும் வழிபட்டபின், அந்த உருவத்தை நீரில் சேர்த்துவிடுவர்.
இதுவே பாவைநோன்பாகும். பாவைப் பாடல்களும், பாவை நோன்பும், அதன் பக்தி நெறியும் அரசன் முதல் ஆண்டிகள் வரை அனைவரையும் ஈர்த்தது. ஆண்டாளும் மிக விருப்பமுடன் பாவை நோன்பு கொண்டாடினாள். மகா வைணவ பாகவத பக்தரான கவிச் சக்கரவர்த்திக் கம்பன் மட்டும், பாவை நோன்பையும், சூடிக்கொடுத்த சுடர்க் கொடியையும் பற்றிக் கேள்விப் படாதிருப்பாரா? கம்பர் பெருமானும், ஆண்டாள் நாச்சியாரும் கவிஞர்களாக வாழ்ந்தவர்களாதலால், ஒருவர் மீதொருவர் மரியாதையும் மாறாத அன்பையும் வைத்திருந்தனர்.
ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில் திருப்பாவை உற்சவம் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. ஸ்ரீரங்கத்திலிருந்த கம்பர் பெருமானுக்குப் பாவை உற்சவத்தைக் காண மிகவும் ஆவல் கொண்டிருந்தார். கம்பரைக் காண ஆண்டாளும் ஆவல் கொண்டிருந்தாள். கம்பரின் அருகிலிருந்த அன்பர்களும் நண்பர்களும் ‘கம்பர் பெருமானே’ பாவை உற்சவம் ஸ்ரீ வில்லிப்புத்தூரில் இரண்டொரு நாளில் நிறைவு பெறப் போகிறது.
நீங்கள் இப்போதே போய்ப் பார்த்துவிடுங்களேன்!’ என்று சொல்ல, கம்பர் உடனே கிளம்பிவிட்டார்.
ஸ்ரீவில்லிப்புத்தூரை நோக்கி ‘பாவை நோன்பு நடக்கிறபோதே பாவை நாச்சியாரைத் தரிசித்துவிட வேண்டும் என்று வேக வேகமாகப் பயணம் மேற்கொண்டார். ஆனால், அவர் ஸ்ரீவில்லிப்புத்தூரை அடையும் போது மார்கழி மாதம் முடிந்து, ‘தை முதல் நாள்’ பிறந்துவிட்டது.
மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளான கம்பர் பெருமான், மிகவும் வருந்தினார். ‘ஐயோ, இன்று தானே பாவை விழா முடிந்து கோதை வடபத்ரர் கோயிலுக்குப் போய் சுவாமியை தரிசித்துவிட்டு, வீடு திரும்பப் போகிறாள். அதற்குள் போய்ச் சேர்ந்துவிட மாட்டோமா?’ என்று தவித்துக் கொண்டே வேகமாகப் பயணித்தார். தை முதல் நாள் காலையிலே, பொழுது விடிந்தபோது, வெகு தூரத்திலே ஸ்ரீவில்லிப்புத்தூரின் வானுயர்ந்த ராஜகோபுரம் தெரிந்தது. அதைக் கண்டு உணர்ச்சிப் பெருக்கில் கண்கள் பனிக்க இருகரம் கூப்பிய வண்ணம் தலைக்கு மேல் உயர்த்தி வணங்கினார், கம்பர். அடுத்த கணமே, ‘ஐயோ, கடவுளே.. கோபுரத்தடிக்கு இந்த நேரம் கோதை வந்திருப்பாளோ? நமக்குத் திவ்ய தரிசனம் கிட்டுமா?’ என்ற கவலையுடன் விரைந்தார். ஆனால், குறித்த நேரத்துக்குள் அவரால் திருமுக்குளத்துக்கு வந்து சேரமுடியவில்லை.
‘பாவையின் நீராடல் வைபவத்தைத் தரிசிக்க முடியாதோ’ என்ற ஆதங்கத்துடன் உற்சவ மண்டபம் நோக்கி விரைந்தார். உற்சவ மண்டபம் அடைந்ததும், அங்கேயே அப்படியே, அந்தச் சாலைப் புழுதியிலேயே, சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்தார், கம்பர். ‘இங்கேதானே பாவை வந்து நின்றிருப்பாள். இங்கேதானே திவ்ய தரிசனம் தந்திருப்பாள்!’ என்றெண்ணியபடியே மண் தரையில் புரண்டு சேவித்தார். அப்போது அவர் கையில், பெண்கள் தலையில் அணியும் ஒரு ஆபரணம் தட்டுப்பட்டது. எடுத்துப் பார்த்தார். அது சூடகம் என்கின்ற வகையைச் சேர்ந்த நகை. ஜிமிக்கி என்றும், குஞ்சலம் என்றும் சொல்வார்கள். கம்பர் அதை ஆச்சர்யத்துடன் எடுத்துக் கொண்டு வேகமாக நடந்தார்.
கம்பர் வருவதற்கும், ஆண்டாள் பாவை உற்சவம் முடிந்து வருவதற்கும் சரியாக இருந்தது.“வழக்கத்திற்கு மாறாக கோதை நாச்சியார் காலதாமதமாக வந்திருக்கிறாளே, என்ன காரணம்?’’ என்று குழம்பினார் கம்பர். ஆனால், இடையில் நடந்ததோ வேறு? ஆண்டாள் நாச்சியார், வடபத்ரசாயி கோயிலுக்கு எழுந்தருளுவதற்கு முன், பட்டர்கள் எல்லாம் கூடி அவளை வெகு அக்கறையுடன் ஏராளமான நகைகளால் சிறப்பாக அலங்காரம் செய்திருக்கிறார்கள்.
அப்போது அவள் தலை கிரீடத்தில் ஒரு அழகான தங்கக் குஞ்சலம் தொங்கிக் கொண்டு அசைந்தாடிய படியே, ஆண்டாளின் அழகுக்கு அழகு சேர்த்துக் கொண்டிருப்பதை மிகவும் ரசித்துக் கவனித்திருக்கிறார்கள், பட்டர்கள். சிறிது நேரம் கழித்துப் பல்லக்கில் அவளை ஆரோகணித்து வடபத்ரர் கோயிலுக்குக் கொண்டு செல்லுகையில், யாரோ ஆண்டாளைப் பார்த்துவிட்டு, ‘‘நிறுத்துங்கள்! பல்லக்கை உடனே நிறுத்துங்கள்!’’ என்று கூவியிருக்கிறார். புறப்பாட்டை நிறுத்திவிட்டுப் பார்த்தால், ஆண்டாளின் கிரீடத்தில் இருந்த அந்த அழகிய தங்கக் குஞ்சலத்தைக் காணோம்! பட்டர்கள் எல்லாம் பதறிப்போனார்கள்.
‘அடடா, நகையைக் காணோமே, கிரீடத்தில் இருந்த குஞ்சலத்தைக் காணோமே? விலையுயர்ந்த தங்கக் குஞ்சலம் காணாமல் போய்விட்டதே! எங்கோ வழியில்தான் அது விழுந்திருக்க வேண்டும் உடனே பல்லக்கைத் திருப்புங்கள்’ என்று பட்டர்கள்கூற, உடனே வெகு வேகமாகப் பல்லக்குத் திரும்ப, வந்த வழியே காணாமற்போன குஞ்சலத்தைத் தேடிக்கொண்டு போனார்கள்.
வழியெங்கும் நகையைத் தேடுவதிலேயே வெகு நேரம் போய்விட, கடைசியில் அந்த நகையில்லாமலே வடபத்ரசாயி கோயிலுக்குப் பல்லக்கு புறப்பட்ட போது, கையில் அந்தத் தங்கக் குஞ்சலத்துடன் வேகமாக உள்ள நுழைந்து கொண்டிருந்தார், கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமான். கம்பரைக் கண்டதும் அங்கிருந்த எல்லோரும் அவரை உற்சாகத்துடன் வரவேற்றார்கள். அதே சமயம், அவர் கையில் வைத்திருந்த ஆண்டாளின் தங்கக் குஞ்சலத்தைக் கண்டு வியப்புற்றனர். ஆண்டாளின் கிரீடத்தில் இருந்த தங்கக் குஞ்சலம் கம்பர் பெருமானிடம் எப்படிப் போயிற்று என்று எண்ணி அனைவரும் ஆச்சர்யமுற்றனர். விஷயமறிந்த கம்பர், உடனே;
‘காணாமல் போன தங்கக் குஞ்சலம் இதுவா பாருங்கள்!’ என்றுகூறி, அது கிடைத்த விவரத்தையும் பட்டர்களிடம் தெரிவித்தார். ‘ஆகா… இதுவேதான், இதுவேதான்!’ என்று மகிழ்ச்சியோடு வாங்கி, அங்கேயே தாயாரின் கிரீடத்தில் மாட்டினார்கள் பட்டர்கள். உடனே கம்பருக்குக் கண்களில் நீர்மல்க நன்றி பாராட்டினார்கள். பாவை நீராட்டு உற்சவத்தின் கடைசி அலங்காரத்துடன், மந்தகாசப் புன்னகையுடன், எழில் மிகு அற்புதக் கோலத்தில், எதிரில் நிற்கும் கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமானுக்கு அவர் விரும்பிய வண்ணமே திவ்ய தரிசனம் தந்தருள்கிறாள் “கோதை நாச்சியார்’’. காணக் கண் கொள்ளாத அந்த அற்புதக் கோலத்தைக் கண்டு மனம் நெகிழ, கண்ணீருடன் தரிசனம் செய்து மகிழ்ந்தார், கம்பர் பெருமான்.
இந்த அற்புதமான திவ்ய தரிசனக் காட்சியைத் தன் தோழமைக் கவிஞனான கம்பர் பெருமானுக்கு, அவர் விரும்பிய வண்ணமே அருளுவதற்காகவே, குஞ்சலம் காணாமல் போன நாடகத்தை நடத்தியிருக்கிறாள், ஆண்டாள். ஸ்ரீவில்லிப்புத்தூரில் இன்றைக்கும் ஒவ்வொரு ஆண்டும் வரும் தை மாதம் முதல் தேதி, கோபுரத்தடிக்கு ஆண்டாள் எழுந்தருளுகிறாள். இங்கே (கம்பர் கண்டெடுத்தபடி) குஞ்சலம் ஒன்று சாற்றி பூஜை மற்றும் ஆரத்தி செய்கிறார்கள். தை மாதம் முதல் நாள் நடைபெறும் இந்த விழாவைக் ‘கம்பன் விழா’ என்று போற்றிக் கொண்டாடுகிறார்கள். கோபுரத்தின் உள்ளே கம்பன் பாடிய பாடல் ஒன்று கல்வெட்டாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
ஆர்.சந்திரிகா
The post கம்பன் கண்டெடுத்த குஞ்சலம் appeared first on Dinakaran.