பெங்களூருவில் மற்றொரு சம்பவம்; மனைவி குடும்பத்தினரின் துன்புறுத்தலால் காவலர் தற்கொலை

4 weeks ago 6

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹுலிமாவு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் திப்பண்ணா(33). இவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், அந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனிடையே, திப்பண்ணாவுடன் அவரது மனைவி மற்றும் மாமனார் தொடர்ந்து தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், 13-ந்தேதி(நேற்று) இரவு பணி முடித்து இரவு வீடு திரும்பியபோது திப்பண்ணாவுக்கும், அவரது மனைவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. இதையடுத்து வீட்டை விட்டு வெளியே சென்ற திப்பண்ணா, பைபனஹள்ளி பகுதி அருகே ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே திப்பண்ணா எழுதி வைத்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், கடந்த 12-ந்தேதி தனது மாமனார் தன்னை மிரட்டியதாகவும், "நீ இறந்துவிட்டால் என் மகள் நிம்மதியாக இருப்பாள்" என்று கூறியதாகவும் திப்பண்ணா குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்தின் அடிப்படையில் திப்பண்ணாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது மனைவி மற்றும் மாமனார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் பெங்களூருவில் மனைவியின் குடும்பத்தினர் துன்புறுத்தியதாக வீடியோ வெளியிட்டு அதுல் சுபாஷ் என்ற நபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பெங்களூருவில் மற்றொரு தற்கொலை சம்பவம் அரங்கேறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Read Entire Article