
திருச்செந்தூர்,
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த கும்பாபிஷேக விழா கடந்த 1-ந் தேதி யாக சாலை பூஜையுடன் விழா தொடங்கியது. நாளை விழாவின் சிகர நிகழ்ச்சியான கோபுர விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றுதல் நடக்கிறது. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு 12-ம் கால வேள்வி வழிபாடு, வேள்வி, மகாநிறை அவி வழிபாடு, மகா தீபாராதனை, யாத்ரா தானம் நடக்கிறது.
கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதே பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக சுமார் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மதியத்தில் இருந்து நாளை மதியம் வரை பக்தர்கள் சுவாமி மூலவரை தரிசனம் செய்ய அனுமதி இல்லை. யாகசாலையில் 64 ஓதுவார்கள் மூலம் திருப்புகழ், பன்னிரு திருமுறைகள் பாடப்பட்டு வருகிறது ஒரே நேரத்தில் 1500 பஸ்கள் நிறுத்தும் வகையில் 3 தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது ஏற்கனவே 400 பஸ்கள் திருச்செந்தூர் வந்து செல்கின்றன. அதனுடன் சேர்த்து கூடுதலாக மேலும் 600 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. 20 தனியார் வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் காணாமல் போகிறவர்கள், திருட்டு போன்றவற்றை தடுக்கும் வகையில் 30 இடங்களில் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் 3 ரோந்து படகுகளும், மீனவர்கள் படகுகள் மற்றும் கடலோர காவல் படை மற்றும் தமிழக பேரிடர் மீட்புக்குழுவினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.60 அகன்ற எல்.இ.டி. திரை மூலம் வாகன நிறுத்தும் இடங்கள், பஸ் நிறுத்தும் இடங்களில் கும்பாபிஷேகத்தை காணும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. 20 இடங்களில் அறுசுவை உணவுடன் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.