பெங்களூருவில் குடிநீர் கட்டணம் உயருகிறது: முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகிறது

1 week ago 4

பெங்களூரு,

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (BWSSB) அதன் அதிகரித்து வரும் செலவினங்களை ஈடுகட்ட தண்ணீர் கட்டணங்களை உயர்த்த உள்ளதாக குடிநீர் வாரிய தலைவர் ராம் பிரசாத் மனோகர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "பெங்களூருவில் குடிநீர் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளோம். அதிகபட்சமாக லிட்டருக்கு ஒரு காசு அதிகரிக்கப்படும். மாதம் 8 ஆயிரம் லிட்டர் வரை தண்ணீர் பயன்படுத்துவோருக்கு 0.15 காசுகளும், 8 ஆயிரம் லிட்டரில் இருந்து 25 ஆயிரம் லிட்டர் வரை நீரை பயன்படுத்துவோருக்கு 0.40 காசுகளும், 25 ஆயிரம் லிட்டருக்கு மேல் பயன்படுத்துவோருக்கு 0.80 காசுகளும் உயா்த்தப்படும்.

50 ஆயிரம் லிட்டரில் இருந்து ரூ.1 லட்சம் லிட்டர் வரை தண்ணீரை பயன்படுத்துவோருக்கு ஒரு காசு அதிகரிக்கும். இனி ஆண்டுதோறும் ஏப்ரல் 1-ந் தேதி குடிநீர் கட்டணம் 3 சதவீதம் வரை உயர்த்தப்படும். இந்த கட்டண உயர்வால் வீட்டு உபயோகத்திற்கு குடிநீர் பயன்படுத்துவோருக்கு ரூ.30 வரை அதிகரிக்கும். வணிக நோக்கத்திற்கு பயன்படுத்துவோருக்கு ரூ.60 வரை உயரும். பெங்களூருவில் கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு குடிநீர் கட்டணத்தை உயர்த்தவில்லை" என்று அவர் கூறினார்.

இந்நிலையில் இந்த கட்டண உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (வியாழக்கிழமை) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கர்நாடகாவில் மின்சார கட்டணம், டீசல் விலை, பால் விலை, பஸ் கட்டணம் போன்றவை உயர்த்தப்பட்டு உள்ளது. பெங்களூருவில் குப்பை கழிவுகளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு வரிகள் உயர்த்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதனிடையே விலைகள் உயர்வை கண்டித்து பா.ஜனதா மக்கள் ஆக்ரோஷம் என்ற பெயரில் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article