பெங்களூரு அடுக்குமாடி கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடி

3 weeks ago 6

புதுடெல்லி,

பெங்களூருவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழைக்கு மத்தியிலும் பெங்களூரு ஹெண்ணூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பாபுசாப் பாளையாவில் புதியதாக 6 மாடி கட்டிடம் கட்டும் பணிகள் நடந்து வந்தன. இந்த கட்டிடப் பணியில் வடமாநில தொழிலாளிகள் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் கனமழை கொட்டி தீர்த்தது. அந்த சமயத்தில் அந்த 6 மாடி கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் கட்டிடத்திற்குள் நின்று வேலை பார்த்து வந்த கூலி தொழிலாளிகள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். வெளியே நின்று வேலை பார்த்த தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்து தப்பி ஓடி உயிர் தப்பினர்.

உயிர் தப்பிய தொழிலாளர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் ஹெண்ணூர் போலீசார், மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 13 பேர் காயமடைந்தனர். இந்த கட்டிடம் விபத்து தொடர்பாக கட்டிட உரிமையாளர் முனிராஜ், அவரது மகன் மோகன், ஒப்பந்ததாரர் முனியப்பா ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்நிலையில், கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பெங்களூருவில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் வேதனையடைந்தேன். என் எண்ணங்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்.

இறந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article