
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம், திருநெல்வேலி நகர்ப்புற கோட்டத்தில் திருநெல்வேலி டவுண் பிரிவுக்கு உட்பட்ட காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் வருகிற 8.7.2025 அன்று நடைபெற உள்ளது. அதன் பொருட்டு தேரோட்டம் நடைபெறுவதற்கு முதல் நாளும் தேரோட்டம் அன்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர் சந்திரா, நான்கு ரத வீதிகளிலும் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
அப்போது அவர், தேரோட்டம் அன்று பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்துவது, தேர் நிலையம் வந்தவுடன் உடனடியாக பணிகள் மேற்கொண்டு மீண்டும் மின்சாரம் வழங்குவது, தேர் செல்லும் நான்கு ரத வீதிகளிலும் தேர் செல்லும் பாதையில் மின் பாதைகளை ஒழுங்கு செய்வது, மற்ற இடங்களுக்கு மாற்று வழியில் மின்சாரம் வழங்குவது உள்பட அனைத்து பணி விவரங்களையும் நேரடி கள ஆய்வில் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் விரிவாக ஆய்வு செய்தார்.
மேலும் தேர் நிலையம் வந்தவுடன் பணிகளை விரைந்து முடிக்க தேவையான தளவாட சாமான்கள், கூடுதல் பணியாளர்கள், பணி அமர்த்தி பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக கடைபிடித்து பணிகள் மேற்கொள்ளவும், தேரோட்டம் நடைபெறும் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய நான்கு ரத வீதிகளிலும் நடைபெற்ற மேல்நிலை மின் பாதையில் இருந்து புதைவடம் மின் பாதையாக மாற்றியமைக்கப்பட்ட பணிகளை அவர் ஆய்வு செய்தார். தேரோட்டம் நடைபெறும் நான்கு ரத வீதிகளிலும் குறுக்கே சென்ற மேல்நிலை மின் பாதைகள் அகற்றப்பட்டு புதைவட மின் பாதையாக மாற்றப்பட்டது. இதன் மூலம் தேர் நிலையம் வந்தவுடன் உடனடியாக மின் விநியோகம் வழங்க ஏதுவாகும். மேற்கண்ட ஆய்வு பணியின் போது திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி, திருநெல்வேலி மண்டல செயற்பொறியாளர் (மின்னியல்) பரிமளம், திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (பொது) வெங்கடேஷ்மணி, திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முருகன், உதவி செயற்பொறியாளர் திருநெல்வேலி டவுண் பிரிவு ராஜகோபால், தொழில்நுட்ப வல்லுநர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.