
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் விடுதலை 2 படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் 'டிரெயின்' படத்திலும், ஆறுமுக குமார் இயக்கத்தில் 'ஏஸ்' படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
அதனை தொடர்ந்து, "பிசினஸ்மேன், டெம்பர், லிகர், டபுள் இஸ்மார்ட்" உள்ளிட்ட படங்களை இயக்கிய பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். பான் இந்தியா அளவில் தயாராக உள்ள இப்படத்தை நடிகை சார்மி கவுர் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிகை தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
ஜூன் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், வெற்றிப் படம் கொடுக்க போராடி வரும் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்க என்ன காரணம்? என்ற கேள்விக்கு விஜய் சேதுபதி பதிலளித்திருக்கிறார்.
அவர் கூறுகையில், "நான் இயக்குனரின் முந்தைய படங்கள் ஹிட்டா அல்லது பிளாப்பா என்று பார்த்து நடிப்பதில்லை. கதை பிடித்திருந்தால் நடிப்பேன்.
ஒரே மாதிரியான கதையில் நடிக்க எனக்கு பிடிக்காது. அதனால், புதிய கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். பூரி ஜெகன்நாத் கூறிய கதையில் நான் இதுவரை நடித்ததில்லை' என்றார்.